திருவேளைக்காரன் வகுப்பு
முன்னுரை
வள்ளியம்மையொடு தமது வேளையைப் (பொழுதைப்) போக்குபவன் எனக்கூறி முருகன் பெருமையை வியந்தோதுவது.
திருவேளைக்காரன் வகுப்பு (மூலம்)
தானதன தத்ததன தானதன தத்ததன
தானதன தத்ததன தானத் தானன
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும்
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும்
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும்
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும்
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும்
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும்
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும்
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும்
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும்
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும்
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும்
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும்
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும்
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும்
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும்
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும்
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும்
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும்
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும்
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும்
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும்
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும்
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே
திருவேளைக்காரன் வகுப்பு (பதம் பிரித்தது)
ஆன பயபத்தி வழிபாடு பெறு முத்தி அது -
வாக நிகழ் பத்த சன வாரக்காரனும்
ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய -
னாருடன் உணக்கை பரி தீமைக்காரனும்
ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றும் அதிவேகக்காரனும்
ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அநு -
பூதி அடைவித்தது ஒரு பார்வைக்காரனும்
ஆடலைவு பட்ட அமரர் நாடது பிழைக்க அம -
ராவதி புரக்கும் அடல் ஆண்மைக்காரனும்
ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அரு -
ணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும்
ஆயிர முகத்து நதி பாலனும் அகத்து அடிமை
ஆனவர் தொடுத்த கவி மாலைக்காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்து அரசும்
ஆதி முடிவு அற்ற திரு நாமக்காரனும்
யான் எனது எனச் சருவும் ஈன சமயத்து எவரும்
யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும்
யாது நிலை அற்று அலையும் ஏழு பிறவிக் கடலை
ஏற விடு நற்கருணை ஓடக்காரனும்
ஏரகம் இடைக்கழி சிராமலை திருப்பழநி
ஏர் அணி செருத்தணியில் வாசக்காரனும்
ஏழையின் இரட்டை வினையாயது ஒரு உடற்சிறை
இராமல் விடுவித்து அருள் நியாயக்காரனும்
யாமளை மணக்கு முக சாமளை மணிக் குயிலை
ஆயென அழைத்து உருகு நேயக்காரனும்
ஏதம் அற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாக முநிவர்க்கு உரிய காவற்காரனும்
ஈரிரு மருப்பு உடைய சோனை மத வெற்பு இவரும்
யானை அளவில் துவளும் ஆசைக்காரனும்
ஏடு அவிழ் கடப்ப மலர் கூதள(ம்) முடிக்கும் இளை -
யோனும் அறிவில் பெரிய மேன்மைக்காரனும்
வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர்
வாவியில் உதித்த முக மாயக்காரனும்
வாரண பதிக்கு உதவு நாரணன் உவக்கு(ம்) மரு -
மானும் அயனைக் கறுவு கோபக்காரனும்
வாழி என நித்தம் மறவாது பரவிற் சரண
வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும்
மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரி யிற் கதிர் செய்
மாநகரியில் கடவுள் ஆயக்காரனும்
வாள் எயிறது உற்ற பகு வாய்தொறு நெருப்பு உமிழும்
வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும்
வாளகிரியைத் தனது தாளில் இடியப் பொருது
வாகை புனை குக்குட பதாகைக்காரனும்
மாசில் உயிருக்கு உயிரும் மாசில் உணர்வுக்கு உணர்வும்
வானில அணுவுக்கு அணு உபாயக்காரனும்
வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட
மகா அடவியில் நிற்பது ஓர் சகாயக்காரனும்
மீனவனும் மிக்க புலவோரும் உறை பொற்பலகை
மீதமர் தமிழ் த்ரய விநோதக்காரனும்
வேரி மது மத்த மதி தாதகி கடுக்கை புனை
வேணியர் துதிப்பது ஒரு கேள்விக்காரனும்
வேலை துகள் பட்டு மலை சூரனுடல் பட்டுருவ
வேலை உற விட்ட தனி வேலைக்காரனும்
மீனுலவு கிர்த்திகை குமாரனு(ம்) நினைக்கும் அவர்
வீடு பெற வைத்து அருள் உதாரக்காரனும்
மேனை அரிவைக்கு உரிய பேரனும் மதித்த திறல்
வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும்
வேதியர் வெறுக்கையும் அநாதி பர வஸ்துவும்
விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும்
வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி
வியாகுல மனத்தினொடு போம்விற்காரனும்
மேவிய புனத்து இதணில் ஓவியம் எனத் திகழும்
மேதகு குறத்தி திரு வேளைக்காரனே.
பதவுரை
தம்மால் முடிந்தவரை, பயத்துடனும் பக்தியுடனும், . இறைவனைத் தொழுது வழிபாடு செய்வதே, தாம் அடைய வேண்டிய முத்திப் பேறு என்று நினைத்து, அந்த வழிபாட்டையே தொடர்ந்து செய்யும், பக்தர் கூட்டங்களின் மேல், அன்பைச் செலுத்துபவன் (குறத்தி திருவேளைக்காரனே).
நிரம்பிய, இனிமை பொருந்திய, மாதுளம் கனியை பெற வேண்டிய காரணத்தினால், முன்பு ஒரு காலத்தில், மூத்தவராகிய விநாயகப் பெருமானுடன், சிவனார் ஏற்படுத்திய போட்டியில் ஏற்பட்ட, வருத்தத்தையும், கோபத்தையும் பெற்றவன் (குறத்தி திருவேளைக்காரனே).
தர்ம சாஸ்திரங்கள் நிறைந்துள்ள, எல்லா உலகங்களையும், ஒரு நொடி பொழுதில், விருப்பத்தோடு வலம் வந்த மிகுத்த வேகத்தை உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
ஆணவ இருளில் மூடி இருக்கும், என்னுடைய ஆன்மாவை ஞான ஒளி பெறச் செய்து (ஒரு பாத்திரத்தில் சேர்ந்துள்ள அழுக்கை விளக்குவது போல்), ஞான அநுபவத்தை எனக்கு புகட்டிய, ஒப்பற்ற அருள் நோக்கை உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
தடுமாற்றமும் அலைச்சலும் அடைந்த, தேவ லோகம் மீண்டும் புத்துயிர் பெறும்படி, அமராவதி நகரைக் காத்தருளிய, வலிமையும் ஆண்மையும் உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
பொன்னால் செய்யப்பட்டதும், அற்புதமான அழகுடையதும், பெருமை மிக்கதுமான, கோபுர வாயிலில், திருவண்ணாமலையில் விளங்கும், என்னுடைய பிரத்யட்ச மூர்த்தியும் (குறத்தி திருவேளைக்காரனே).
ஆயிரம் பிரிவுகளை உடைய கங்கா நதியின் பாலகனும், உள்ளத்துள்ளே மெய்யன்பு பூண்ட அடியார்கள், இயற்றிய சொல் மாலைகளை அன்புடன் புனைந்திருப்பவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
ஆறுமுகம் படைத்த ஞான சொரூபனும், பன்னிரு திருத்தோள்களை உடைய மன்னனும், அந்தமும் ஆதியும் இல்லாத பெரும் புகழை உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
நான், என்னுடையது எனும் அகங்காரம் மமகாரத்துடன் மற்றவர்களுடன் சண்டை போடும், இழிவான புறச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எவராலும் எந்த வகையிலும் அறிய முடியாத, நுணுக்கமான சத்தியப் பொருளாய் இருப்பவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
எப்போதும் ஒரு நிலையில் இல்லாது சதா வீசி வீசி அடங்கும், ஊர்வன, நடப்பன, நீரில் வாழ்வன, பறப்பன, மனிதர், தேவர், பேய்க் கணங்கள் எனும் பிறப்புக்களைக் கொண்டுவரும் பவ சாகரத்தை, தப்ப வைத்து கரை ஏறச் செய்யும் நன்மை தரும் தன் பாதங்களான புணையைக் கருணையுடன் கொடுக்கும் ஓடக்காரனும் (குறத்தி திருவேளைக்காரனே).
சுவாமி மலை திருவிடைக்கழி திருச்சிராமலை எனும் திருச்சிராப் பள்ளி அல்லது சென்னிமலை, பழநி மலை, திருத்தணி போன்ற திருப்பதிகளில் வாசம் செய்பவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
இந்த அடிமை முற்பிறவியில் செய்த நல்வினை தீவினையால் ஏற்பட்ட, இந்த சரீரமாகிய சிறைச் சாலை நீங்கும்படி எனக்கு விடுதலை கொடுத்த நீதிமானும் (குறத்தி திருவேளைக்காரனே).
கரு நீல உருவினள், தெய்வீக மணம் வீசும் நீல நிறத்தவள், (ஆகிய) அழகான குயில் போன்ற பார்வதி தேவியை, எனது அன்னையே என அன்புடன் உருகி அழைக்கும் நேசம் உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
குற்றம் அனைத்தும் நீங்க, சந்தேகம் இல்லாமல் உறுதி பெறும்படி, மனம் ஒடுங்கும் நிலையைத் தருகின்ற ஞான ஒளி வீசும் விளக்கு போன்றவனும், வேள்விகளைச் செய்யும் யாக முனிவர்களைக் பாதுகாக்கும் யாக ரக்ஷ்ச மூர்த்தியும் (குறத்தி திருவேளைக்காரனே).
நான்கு தந்தங்களை உடைய பெரு மழை போல் பெருகி வரும் மதநீர் கொட்டுகின்ற, மலை போன்ற ஐராவதத்தில் பவனி வரும் தேவயானையுடன், நெகிழ்ச்சி உற்று சேருகின்ற அன்பைச் செலுத்துகின்றவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
இதழ்கள் விரிந்த கடப்ப மாலைகளையும், கூதாள மலர் மாலைகளையும் தரித்திருக்கும் குமாரனும், சிறந்த ஞான அறிவாளியாக விளங்குபவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
தேவர்களின் பொருட்டும், இந்திரனுக்காகவும், சரவணப் பொய்கையில் அவதாரம் செய்த, அற்புதமான அழகு படைத்தவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
ஐராவதத்தின் தலைவனாகிய தேவேந்திரனுக்கு பற்பல உதவிகளைச் செய்த, நாராயண மூர்த்தி மகிழ்ச்சி அடையும் மருமகனும், பிரணவப் பொருள் தெரியாத குற்றத்திற்காக பிரம்மனை கோபித்த கோபக்காரனும் (குறத்தி திருவேளைக்காரனே).
தேவரீர் வாழ்ந்து வாழி வாழி என தினமும் மறவாமல் வாழ்த்துக் கூறி பாடினால், தன் திருவடித் தாமரைகளை தன் அடியார்களுக்கு அடைக்கலமாக கொடுக்கும் கொடையாளியும் (குறத்தி திருவேளைக்காரனே).
மாட மாளிகைகளும் மதில்களும் மிக்க திருக்குற்றால நன்னகரிலும், கதிர்காமம் எனும் பெரிய நகரத்திலும் தேவர்கள் சூழ விளங்கி வீற்றிருப்பவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
வாள் போல் பிரகாசித்து கூர்மை கொண்ட பற்களை உடைய திறந்துள்ள வாய்களில் நெருப்பு ஜ்வாலையை கக்கும், வாசுகி எனும் சர்ப்பராஜனை தனது மூக்கால் பிடித்து உதறுகின்ற வாசிக் குதிரையான மயிலை வாகனமாக உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
சக்ர வாள கிரியை தனது கால்களினால் மோதித் தள்ளி, வெற்றி மாலை சூடும் சேவலை தனக்கு கொடியாக உடையவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
குற்றமற்ற ˝வாத்மாக்களுக்குள் உயிர்ப்பு சக்தியாக இருப்பவரும், கெடுதல் அற்ற உள்ளத்துள் உள் ஒளியாக இருப்பவரும், ஆகாயத்தில் காணப்படும் அணுக்களுக்குள் சிறிய அணுவாய் இருக்கும் பெரிய தந்திரக்காரனும் (குறத்தி திருவேளைக்காரனே).
எனது பிறவி வேதனையை தீர்த்து உலக வாசனையே இல்லாதபடி செய்த ஆச்சார்ய மூர்த்தியும், பெரிய காட்டில் தோன்றி எனக்கு பெரிய உதவியைச் செய்தவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
மீனைக் கொடியாக கொண்ட பாண்டிய வம்சத்தில் உக்ர பாண்டியனாக உதித்தவனும், அறிவில் மிக்க சங்கப் புலவர்கள் வீற்றிருக்கும் அழகிய சங்கப் பலகையின், மீது அமர்ந்திருக்கும் முத்தமிழில் வல்லமை ஒப்பில்லாத திறமை உடைய விசித்திரமானவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
நறு மணம் வீசும், தேன் நிரம்பி இருக்கும், ஊமத்தம் பூ, சந்திரன், (தா + தகி) குற்றங்களைத் தகிப்பதால் தாதகி எனப் பெயருடைய அகத்தி, கொன்றை (இவைகளை) தரித்துள்ள சடையை உடைய சிவபெருமான், வணங்குகின்ற கல்வி சிரேஷ்டனும் (குறத்தி திருவேளைக்காரனே).
சமுத்திரம் தூள் படவும், தனக்கு காவலாக இருந்த ஏழு மலைகளுடன் சூரன் உடல், கிரவுஞ்ச மலை இவைகளை பொடிந்து போகும்படி ஊடுருவி, சமுத்திரத்தின் உள்ளே வேலாயுதத்தை செலுத்திய ஒப்பற்ற தொழில் செய்பவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
நட்சத்திரங்களVக விளங்கும் கிருத்திகை மாதர்களின் வளர்ப்புப் புதல்வனும், தன்னை தியானிப்பவர்கள், மோட்சத்தை அடையும்படி செய்து அருள் புரியும் கருணா மூர்த்தியும் (குறத்தி திருவேளைக்காரனே).
இமராஜனின் மனைவி, மேனை, எனும் மாதின் பேரனாக வந்தவனும், அனைவராலும் போற்றப்படும் வலிமை மிக்க வீரனும், இராக்கத குலத்தினரை சூறாவளிக் காற்று போல் அழித்தவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
அந்தணர்களின் பெரும் செல்வமும், அநாதியான பரம் பொருளும், விசாக நக்ஷத்திரத்திற்கு உரியவனும், பலவித உருவங்களை எடுத்தவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
வேடுவரின் மலைக் காட்டில் தனது உருவத்தை மறைத்து வேறு உருவம் தரித்து நாரத முனிவர் சொன்னபடி, தான் முன்பு கொடுத்த வரத்தின்படி வந்து வேடர்களிடம் வளர்ந்த வள்ளியம்மையை ஆட்கொள்ளுவதற்காக கவலை பொருந்திய மனத்துடன் ஞானமாகிய வில்லைத் தரித்துக் கொண்டு வருபவனும் (குறத்தி திருவேளைக்காரனே).
மலைச் சாரத்தில் உள்ள தினைப் புனத்தில், பரண் மேலே, வரையப்பட்ட சித்திரம் போல அழகாக விளக்கும், மேன்மையான வள்ளிபிராட்டியுடன், பல வித திரு விளையாடல்கள் செய்து அவளுடன் பொழுதைப் போக்கியவன்தான் இதுகாறும் சொன்னபெருமை மிக்கவன்.
சொல் விளக்கம்
1. ஆன ... தம்மால் முடிந்தவரை, பயபத்தி ... பயத்துடனும் பக்தியுடனும், .... வழிபாடு ... இறைவனைத் தொழுது வழிபாடு செய்வதே, பெறு முத்தி தாம் அடைய வேண்டிய முத்திப் பேறு என்று நினைத்து, அதுவாக நிகழ் அந்த வழிபாட்டையே தொடர்ந்து செய்யும், பத்த சன ... பக்தர் கூட்டங்களின் மேல், வாரக்காரனும் ... அன்பைச் செலுத்துபவன் .. (குறத்தி திருவேளைக்காரனே).
ஆர ... நிரம்பிய, மதுரித்த ... இனிமை பொருந்திய, கனி காரணம் ... மாதுளம் கனியை பெற வேண்டிய காரணத்தினால், முதல் ... முன்பு ஒரு காலத்தில், தமையனாருடன் ... மூத்தவராகிய விநாயகப் பெருமானுடன், உணக்கை ... சிவனார் ஏற்படுத்திய போட்டியில் ஏற்பட்ட, பரி ... வருத்தத்தையும், தீமைக்காரனும் ... கோபத்தையும் பெற்றவன் .. (குறத்தி திருவேளைக்காரனே).
ஆகமம் விளைத்த ... தர்ம சாஸ்திரங்கள் நிறைந்துள்ள, அகில லோகமும் ... எல்லா உலகங்களையும், நொடிப்பளவில் ... ஒரு நொடி பொழுதில், ஆசையோடு சுற்றும் ... விருப்பத்தோடு வலம் வந்த அதிவேகக்காரனும் ... மிகுத்த வேகத்தை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
4. ஆணவ அழுக்கடையும் ... ஆணவ இருளில் மூடி இருக்கும், ஆவியை விளக்கி ... என்னுடைய ஆன்மாவை ஞான ஒளி பெறச் செய்து (ஒரு பாத்திரத்தில் சேர்ந்துள்ள அழுக்கை விளக்குவது போல்), அநுபூதி அடைவித்தது ... ஞான அநுபவத்தை எனக்கு புகட்டிய, ஒரு பார்வைக் காரனும் ... ஒப்பற்ற அருள் நோக்கை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
5. ஆடலைவு பட்ட ... தடுமாற்றமும் அலைச்சலும் அடைந்த, அமரர் நாடது பிழைக்க ... தேவ லோகம் மீண்டும் புத்துயிர் பெறும்படி, அமராவதி புரக்கும் ... அமராவதி நகரைக் காத்தருளிய, அடல் ஆண்மைக்காரனும் ... வலிமையும் ஆண்மையும் உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
6. ஆடக ... பொன்னால் செய்யப்பட்டதும், விசித்ர ... அற்புதமான அழகுடையதும், கன ... பெருமை மிக்கதுமான, கோபுர முகப்பில் ... கோபுர வாயிலில், அருணாபுரியில் நிற்கும் ... திருவண்ணாமலையில் விளங்கும், அடையாளக்காரனும் ... என்னுடைய பிரத்யட்ச மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
7. ஆயிர முகத்து நதி பாலனும் ... ஆயிரம் பிரிவுகளை உடைய கங்கா நதியின் பாலகனும், அகத்தடிமையானவர் ... உள்ளத்துள்ளே மெய்யன்பு பூண்ட அடியார்கள், தொடுத்த கவி மாலைக்காரனும் ... இயற்றிய சொல் மாலைகளை அன்புடன் புனைந்திருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
8. ஆறுமுக வித்தகனும் ... ஆறுமுகம் படைத்த ஞான சொரூபனும், ஆறிரு புயத்தரசும் ... பன்னிரு திருத்தோள்களை உடைய மன்னனும், ஆதி முடிவற்ற திருநாமக்காரனும் ... அந்தமும் ஆதியும் இல்லாத பெரும் புகழை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
9. யான் எனது எனச்சருவும் ... நான், என்னுடையது எனும் அகங்காரம் மமகாரத்துடன் மற்றவர்களுடன் சண்டை போடும், ஈன சமயத்து எவரும் ... இழிவான புறச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எவராலும் யாரும் உணர் ... தற்கரிய ... எந்த வகையிலும் அறிய முடியாத, நேர்மைக் காரனும் நுணுக்கமான சத்தியப் பொருளாய் இருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
10. யாது நிலை அற்று அலையும் ... எப்போதும் ஒரு நிலையில் இல்லாது சதா வீசி வீசி அடங்கும், ஏழு பிறவிக் கடலை ... ஊர்வன, நடப்பன, நீரில் வாழ்வன, பறப்பன, மனிதர், தேவர், பேய்க் கணங்கள் எனும் பிறப்புக்களைக் கொண்டுவரும் பவ சாகரத்தை, ஏறவிடு நற்கருணை ஓடக் காரனும் ... தப்ப வைத்து கரை ஏறச் செய்யும் நன்மை தரும் தன் பாதங்களான புணையைக் கருணையுடன் கொடுக்கும் ஓடக்காரனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
11. ஏரகம் ... சுவாமி மலை இடைக்கழி ... திருவிடைக்கழி சிராமலை ... திருச்சிராமலை எனும் திருச்சிராப் பள்ளி அல்லது சென்னிமலை, ... திருப்பழநி ... பழநி மலை, ஏர் அணி செருத்தணியில் வாசக்காரனும் திருத்தணி போன்ற திருப்பதிகளில் வாசம் செய்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
12. ஏழையின் இரட்டை வினையாயது ... இந்த அடிமை முற்பிறவியில் செய்த நல்வினை தீவினையால் ஏற்பட்ட, ஒர் உடற்சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் ... இந்த சரீரமாகிய சிறைச் சாலை நீங்கும்படி எனக்கு விடுதலை கொடுத்த நீதிமானும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
13. யாமளை ... கரு நீல உருவினள், மணக்கு முக சாமளை ... தெய்வீக மணம் வீசும் நீல நிறத்தவள், மணிக்குயிலை ... (ஆகிய) அழகான குயில் போன்ற பார்வதி தேவியை, ஆய் என அழைத்துருகு நேயக்காரனும் ... எனது அன்னையே என அன்புடன் உருகி அழைக்கும் நேசம் உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
14. ஏதமற ... குற்றம் அனைத்தும் நீங்க, நிச்சய ... சந்தேகம் இல்லாமல் உறுதி பெறும்படி, மனோலய விளக்கொளியும் ... மனம் ஒடுங்கும் யாக நிலையைத் தருகின்ற ஞான ஒளி வீசும் விளக்கு போன்றவனும், முநிவர்க்குரிய காவற்காரனும் ... வேள்விகளைச் செய்யும் யாக முனிவர்களைக் பாதுகாக்கும் யாக ரக்ஷ்ச மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
... 15.ஈரிரு மருப்புடைய ... நான்கு தந்தங்களை உடைய சோனைமத ... பெரு மழை போல் பெருகி வரும் மதநீர் கொட்டுகின்ற, வெற்பில் வரும் மலை போன்ற ஐராவதத்தில் பவனி வரும் யானை அளவில் ... தேவயானையுடன், துவளும் ஆசைக்காரனும் ... நெகிழ்ச்சி உற்று சேருகின்ற அன்பைச் செலுத்துகின்றவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
16. ஏடு அவிழ் கடப்ப மலர் கூதளம் முடிக்கும் இளையோனும் ... இதழ்கள் விரிந்த கடப்ப மாலைகளையும், கூதாள மலர் மாலைகளையும் தரித்திருக்கும் குமாரனும், அறிவில் பெரிய மேன்மைக்காரனும் ... சிறந்த ஞான அறிவாளியாக விளங்குபவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
17. வானவர் பொருட்டு ... தேவர்களின் பொருட்டும், மகவானது பொருட்டு ... இந்திரனுக்காகவும், மலர் வாவியில் உதித்த ... சரவணப் பொய்கையில் அவதாரம் செய்த, முக மாயக்காரனும் ... அற்புதமான அழகு படைத்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
18. வாரணபதிக்கு உதவு ... ஐராவதத்தின் தலைவனாகிய தேவேந்திரனுக்கு பற்பல உதவிகளைச் செய்த, நாரணன் உவக்கு மருமானும் ... நாராயண மூர்த்தி மகிழ்ச்சி அடையும் மருமகனும், அயனைக்கறுவு கோபக்காரனும் ... பிரணவப் பொருள் தெரியாத குற்றத்திற்காக பிரம்மனை கோபித்த கோபக்காரனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
19. வாழியென நித்த மறவாது பரவிற் ... தேவரீர் வாழ்ந்து வாழி வாழி என தினமும் மறவாமல் வாழ்த்துக் கூறி பாடினால், சரண வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் ... தன் திருவடித் தாமரைகளை தன் அடியார்களுக்கு அடைக்கலமாக கொடுக்கும் கொடையாளியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
20. மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியில் ... மாட மாளிகைகளும் மதில்களும் மிக்க திருக்குற்றால நன்னகரிலும், கதிர்செய் மாநகரியில் கடவுள் ஆயக் காரனும் ... கதிர்காமம் எனும் பெரிய நகரத்திலும் தேவர்கள் சூழ விளங்கி வீற்றிருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
21. வாள் எயிறு அது உற்ற . .. வாள் போல் பிரகாசித்து கூர்மை கொண்ட பற்களை உடைய பகு வாய்தொறு நெருப்புமிழும் ... திறந்துள்ள வாய்களில் நெருப்பு ஜ்வாலையை கக்கும், வாசுகி எடுத்து உதறும் வாசிக் காரனும் ... வாசுகி எனும் சர்ப்பராஜனை தனது மூக்கால் பிடித்து உதறுகின்ற வாசிக் குதிரையான மயிலை வாகனமாக உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
22. வாளகிரியைத் தனது தாளில் இடியப் பொருது ... சக்ர வாள கிரியை தனது கால்களினால் மோதித் தள்ளி, வாகைபுனை குக்குட பதாகைக் காரனும் ... வெற்றி மாலை சூடும் சேவலை தனக்கு கொடியாக உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
23. மாசு இல் உயிருக்கு உயிரும் ... குற்றமற்ற ˝வாத்மாக்களுக்குள் உயிர்ப்பு சக்தியாக இருப்பவரும், மாசு இல் உணர்வுக்கு உணர்வும் ... கெடுதல் அற்ற உள்ளத்துள் உள் ஒளியாக இருப்பவரும், வானில் அணுவுக்கு அணு உபாயக்காரனும் ... ஆகாயத்தில் காணப்படும் அணுக்களுக்குள் சிறிய அணுவாய் இருக்கும் பெரிய தந்திரக்காரனும் (குறத்தி திருவேளைக்காரனே).
24. வாதனை தவிர்த்த குரு நாதனும் ... எனது பிறவி வேதனையை தீர்த்து உலக வாசனையே இல்லாதபடி செய்த ஆச்சார்ய மூர்த்தியும், வெளிப்பட மகா அடவியில் நிற்பதொர் சகாயக்காரனும் ... பெரிய காட்டில் தோன்றி எனக்கு பெரிய உதவியைச் செய்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
25. மீனவனு ... மீனைக் கொடியாக கொண்ட பாண்டிய வம்சத்தில் உக்ர ... பாண்டியனாக உதித்தவனும், மிக்க புலவோரும் உறை பொற்பலகை அறிவில் மிக்க சங்கப் புலவர்கள் வீற்றிருக்கும் அழகிய சங்கப் பலகையின், மீதமர் தமிழ் த்ரய விநோதக்காரனும் ... மீது அமர்ந்திருக்கும் முத்தமிழில் வல்லமை ஒப்பில்லாத திறமை உடைய விசித்திரமானவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
26. வேரி ... நறு மணம் வீசும், மது ... தேன் நிரம்பி இருக்கும், மத்த ... ஊமத்தம் பூ, மதி ... சந்திரன், தாதகி ... (தா + தகி) குற்றங்களைத் தகிப்பதால் தாதகி எனப் பெயருடைய அகத்தி, கடுக்கை ... கொன்றை (இவைகளை) புனை வேணியர் ... தரித்துள்ள சடையை உடைய சிவபெருமான், துதிப்பதொரு கேள்விக்காரனும் ... வணங்குகின்ற கல்வி சிரேஷ்டனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
27. வேலை துகள் பட்டு ... சமுத்திரம் தூள் படவும், மலை சூரன் உடல் பட்டு உருவ ... தனக்கு காவலாக இருந்த ஏழு மலைகளுடன் சூரன் உடல், கிரவுஞ்ச மலை இவைகளை பொடிந்து போகும்படி ஊடுருவி, வேலை உற விட்ட தனி வேலைக்காரனும் ... சமுத்திரத்தின் உள்ளே வேலாயுதத்தை செலுத்திய ஒப்பற்ற தொழில் செய்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
28. மீனுலவு கிருத்திகை குமாரனும் ... நட்சத்திரங்களVக விளங்கும் ... கிருத்திகை மாதர்களின் வளர்ப்புப் புதல்வனும், நினைக்குமவர் தன்னை தியானிப்பவர்கள், வீடு பெற வைத்து அருள் உதாரக்காரனும் ... மோட்சத்தை அடையும்படி செய்து அருள் புரியும் கருணா மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
29. மேனை அரிவைக்குரிய பேரனு ... இமராஜனின் மனைவி, மேனை, ... எனும் மாதின் பேரனாக வந்தவனும், மதித்ததிறல் வீரனும் அனைவராலும் போற்றப்படும் வலிமை மிக்க வீரனும், அரக்கர்குல சூறைக்காரனும் ... இராக்கத குலத்தினரை சூறாவளிக் காற்று போல் அழித்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
30. வேதியர் வெறுக்கையும் ... அந்தணர்களின் பெரும் செல்வமும், ... அநாதி பரவஸ்துவும் ... அநாதியான பரம் பொருளும், விசாகனும் ... விசாக நக்ஷத்திரத்திற்கு உரியவனும், விகற்ப வெகு ரூபக்காரனும் பலவித உருவங்களை எடுத்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
31. வேடுவர் புனத்தில் உரு மாறி ... வேடுவரின் மலைக் காட்டில் தனது உருவத்தை மறைத்து வேறு உருவம் தரித்து முனி சொற்படி ... நாரத முனிவர் சொன்னபடி, வியாகுல மனத்தினொடு போம் விற்காரனும் ... தான் முன்பு கொடுத்த வரத்தின்படி வந்து வேடர்களிடம் வளர்ந்த வள்ளியம்மையை ஆட்கொள்ளுவதற்காக கவலை பொருந்திய மனத்துடன் ஞானமாகிய வில்லைத் தரித்துக் கொண்டு வருபவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
32. மேவிய புனத்து ... மலைச் சாரத்தில் உள்ள தினைப் புனத்தில், இதணில் ... பரண் மேலே, ஓவியம் எனத்திகழும் ... வரையப்பட்ட சித்திரம் போல அழகாக விளக்கும், மேதகு குறத்தி . .. மேன்மையான வள்ளிபிராட்டியுடன், திரு வேளைக்காரனே ... பல வித திரு விளையாடல்கள் செய்து அவளுடன் பொழுதைப் போக்கியவன்தான் இதுகாறும் சொன்னபெருமை மிக்கவன்.
