மங்களம்
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
வாழ்த்து
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
அநுபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
வாழ்த்து
ஆறிரு தடந்தோள் வாழ்க!
ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறுமுகம் வாழ்க!
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க!
செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க! யானைதன் அணங்கு வாழ்க!
மாறில்லா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியார் எல்லாம்
வாழ்த்து
எல்லாம் வல்ல பழநியாண்டவருக்கு அரோகரா!
அருணகிரிநாதப் பெருமானுக்கு அரோகரா!
