திருப்பரங்கிரி வகுப்பு
திருப்பரங்கிரி வகுப்பு(மூலம்)
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன தனதானனா
சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை
தாரமுந்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு
தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமெ
தாழ்வகன்றிடு வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாதுரந்தனி
லாவதுந்தளர் சாவொழிந்திடு யோகமுஞ்சிவ பேறும் எந்தநி
தானமுஞ்செய்த ராசுகண்டது போல்வரும்பொது வாகுமென்றுன திருதாளையே
ஓதினெஞ்சய ரார்தினந்திரி காலமுந்தொழு வோர்விரும்பிய
தேதும் அன்புட னேதருங்க்ருபை யாகவந்தநு பூதிதந்துமு
னூல்கடந்திட வேபுரந்தருள் கூரும்இங்கித சேவைநம்பிய படிகாணவே
ஓகைவந்தனை யாய்வணங்கிய ஏழைசிந்தையு ளேநினைந்திடு
வேளைவந்தினி தாய்வரந்தர வேணுமென்றக மேவருந்தியும்
ஓதினன்தினம் நான்விளம்புதல் நீஅறிந்தும் இதேன்இரங்கிலை யறிவேன்ஐயா
ஆதியந்தம னாதிவிந்துவு நாதமும்பிரி யாநிறைந்தவ
ருபஇன்பசொ ரூபசுந்தர சோதிமின்பொலி நீதியம்பொரு
ளாகநின்றப ராபரன்கரு ணாலயன்புல வோர்இறைஞ்சிட எதிர்காளிவா
தாடலின்செக சேகிணங்கிண சேகுடண்டம டாடமண்டம
தாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந்திமி தோஎனுந்தொனி
யார்சிலம்பொலி தாளமிஞ்சிட வேநடம்புரி பாதநம்பரன் அருள்பாலனே
மாதிரந்திசை யாகவந்திக டாசலந்திரை மாசலம்புவி
மாகமண்டக டாகமும்பொனின் மேருவின்தலை யேகுலுங்குிட
வாசமொன்றிய கால்பொருந்துகள் வான்நிரம்பிட வேவருங்கதிர் வடிவேலனே
வானரங்கதிர் தாவுதண்டலை மேவுகொண்டலை யூடுநின்றலை
மாஇனங்களி கூஇரூநண்பொடு கோகநஞ்செறி வாவிசிந்திய
பால்அருந்திய பேர்சிறந்திரு மூவர்விஞ்சையர் சூழ்பரங்கிரி முருகேசனே.
திருப்பரங்கிரி வகுப்பு(பதம் பிரித்தது)
சாதியும் குலம் ஆவதும் குடி ஆவதும் சனம் ஆவதும்கிளை
தாரமும் திரபாலரும் பிரதானமும் பெருகு ஆண்மையும் பெறு
தானமும் பகுமானமும்சிவஞானமும் பல கோலமும் புரி தொழிலோடுமே
தாழ்வு அகன்றிடு வாழ்வும் வெம்பிணி நோயும் அங்கு அது இலாது உரம்தனில்
ஆவதும் தளர் சாவு ஒழிந்திடு யோகமும் சிவபேறும் எந்த நிதானமும்
செய் தராசு கண்டது போல் வரும் பொது ஆகும் என்றுஉனது இருதாளையே
ஓதின் நெஞ்சு அயரார் தினம் திரிகாலமும் தொழுவோர் விரும்பியது
ஏதும் அன்புடனே தரும் க்ருபையாக வந்து அநுபூதி தந்து முன் நூல்
கடந்திடவே புரந்து அருள் கூரும் இங்கித சேவை நம்பிய படி காணவே
ஓகை வந்தனையாய் வணங்கிய ஏழை சிந்தையுளே நினைந்திடு
வேளை வந்து இனிதாய் வரம் தரவேணும் என்று அகமே வருந்தியும்
ஓதினன் தினம் நான் விளம்புதல் நீ அறிந்தும் இது ஏன் இரங்கிலை அறிவேன் ஐயா
ஆதி அந்தம்அனாதி விந்துவு(ம்) நாதமும் பிரியா நிறைந்த
அரூப இன்ப சொரூப சுந்தர சோதி மின்பொலி நீதி அம் பொருள் ஆக
நின்ற பராபரன் கருணாலயன் புலவோர் இறைஞ்சிட எதிர் காளி
வாதாடலின் செகசே கிணங்கிண சேகுடண்ட மடாடமண்ட
மதாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந் திமிதோ எனும்
தொனியார் சிலம்பொலி தாள மிஞ்சிடவே நடம்புரி பாத நம்பரன் அருள்பாலனே
மாதிரம் திசையாக அந்தி கடாசலம் திரைமாசலம் புவி மாகம்
அண்ட கடாகமும் பொனின் மேருவின் தலையே குலுங்கிட வாசம்
ஒன்றிய கால் பொரும் துகள் வான் நிரம்பிடவே வரும் கதிர் வடிவேலனே
வானரம் கதிர் தாவு தண்டலை மேவு கொண்டல் ஐயூடு நின்றலை
மாஇனம் களிகூரும் நண்பொடு கோகநம் செறி வாவி சிந்திய பால்
அருந்திய பேர் சிறந்த இருமூவர் விஞ்சையர் சூழ் பரங்கிரி முருகேசனே
பதவுரை
சாதி குலம் என்பன, குடும்பம். குடித்தனம் என்பது, ¤னக்கட்டு என்பது, சுற்றத்தார் - மனைவி ஸ்திரம் (நிலை) என நம்புகின்ற மக்கள், விசேஷ நிலை, ஓங்கி வளரும் ஆண்மைக் குணம் (மனோதிடம்), பெறுகின்ற தானப் பொருள்கள், மிக்க பெருமை, சிவஞானம், பல வகைத்தான அலங்காரங்கள் இவை எல்லாம் ஏற்படுவதான தொழில்களுடனே செய்கைகளுடன்,
அவமானம் - குற்றம் இல்லாத வாழ்க்கையும், கொடிய பிணி நோய்கள் இல்லாமல் (மனம், தேகம் இவை) வன்மையைப் பெற்றிருத்தலும் தளர்ச்சியும் சாவும் இல்லாததான பாக்கிய நிலையும், சிவனாரது திருவருட்பேறும், எல்லா விதமான சமநிலையைச் காட்டித் தருகின்ற துலாக் கோலைக் கண்டது போன்ற நிலையும் வந்து கூடும். அந்நிலை யாரும் பகிரங்கமாகப் பார்க்கக் கூடியதாய் இருக்கும் - என அறிந்து, உனது இரண்டு திருவடிகளையே
ஓதுவதால், மனம் சோர்வடையாதவராய்த் தினந்தோறும், காலை, உச்சி, மாலை ஆக மூன்று வேளைகளிலும் உன்னைப் பணிபவர்கள் விரும்பின எல்லாப் பொருள்களையும் அன்புடனே தருகின்ற கிருபையுடனே நீ வந்து அனுபவஞானம் என்னும் செல்வத்தை அவர்களுக்குத் தந்து பழைமையதான சாஸ்திரங்களை கலைஞானங்களைக் கடந்த நிலையில் (அவர்கள்) கூடுமாறு (அவர்களைப்) நீ காப்பாற்றி அருள்மிக்கு நீ தருகின்ற இனிமையான தரிசனத்தை (நான்) நம்பின வண்ணமே காணும்படி
மகிழ்ச்சியுடனும் நன்றி பாராட்டுடனும் (உன்னை) வணங்கின (இந்த) ஏழையாகிய என்னுடைய மனதிலே, (உன்னை) நான் நினைக்கும் சமயத்தில் (நீ) வந்து மகிழ்வுடன் வரம் தந்தருள வேண்டுமென்று உள்ளத்திலே நான் வருத்தப்பட்டு தினந்தோறும் ஓதி வேண்டினேன். அங்ஙனம் நான் முறையிடுவது நீ அறிந்திருந்தும் இவ்விஷயத்தில் நீ ஏன் இரக்கம் கொள்ளவில்லை! நீ இரங்கவில்லை என்பதை நான் அறிவேன், ஐயனே!
- முதல், - முடிவு ஆதியின்மை, விந்துவும் நாதமும் (சோணிதம்) பிரியாமல் நிறைந்ததாய், அரூபம் இன்ப சொரூபம் ஆக இரண்டு நிலையுங் கொண்ட அழகிய ºஜாதியாகவும், ஒலி விளங்கும் அம் நீதிப் பொருள் - அழகிய நீதிப் பொருளாகவும் நின்ற பராபர மூர்த்தி, கருணைக்கு இடமான மூர்த்தி, தேவர்கள் வணங்க, - எதிர்த்து நின்ற காளி.
தன்னுடன் வாதாடின போது செகசே கிணங்கிண... தாதிமிந்திமிதோ என்னும் ஒலி நிறைந்த சிலம்பின் ஒலியும், தாளமும் மிகும்படி - நடனம் புரிந்த திருவடிகளை உடைய நமது பரன் - சிவபிரான் அருளிய குழந்தையே!
யானைகள் எண் திசைகளிலும் பொருந்தி, மதசலம் விடவும், கடலின் பெருநீரும், உலகும், விண்ணும், அண்டகோளஓடும், பொன் மலையாகிய மேருமலையுடன் சிகரங்களும் குலுங்கிட - குலுங்கவும் கலங்கிக் குலுங்கவும் மலர்களின் நறுமணம் பொருந்திய, காற்று எழுப்பும் தூசி ஆகாயத்தை அளாவி நிரம்பவும் வருகின்ற ஒளியும் கூர்மையும் கொண்ட வேலாயுதனே!
குரங்குகள் (தாவு) தண்டலை (சோலைகளில்), - சூரிய ஒளி பரவும் சோலைகளில் பொருந்திய காற்றின் அழகிடையே, நின்று அலைகின்ற, வண்டின் கூட்டம் மகிழ்ச்சி மிக்க ஆசையுடன் செந்தாமரைகளில், - நெருங்கும், சரவணப் பொய்கையில் நீ உமையம்மையின் முலைப்பால் உண்டபொழுது சிந்தின பாலை ) மீன்களாயிருந்து உண்ட கீர்த்தி மிக்க (பராசர) முநிவர்களின் குமாரர்களாகிய தவத்தினர் ஆறுபேரும், விஞ்சையர் - வித்தியாதரர்களும் சென்று வணங்கும் திருப்பரங்கிரி முருகேசனே!
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. சாதியும் குலம் ஆவதும் குடி ஆவதும் சனம் ஆவதும் கிளை தாரமும் திரபாலரும் பிரதானமும் பெருகுஆண்மையும் பெறு தானமும் பகுமானமும்சிவஞானமும் பல கோலமும் புரி தொழிலோடுமே
சாதி குலம் (ஆவதும்) என்பன, (குடி ஆவதும்) குடும்பம். குடித்தனம் என்பது, (சனம் ஆவதும்) ¤னக்கட்டு என்பது, (கிளை) சுற்றத்தார் - (தாரம்) மனைவி (திரபாலர்) ஸ்திரம் (நிலை) என நம்புகின்ற மக்கள், (பிரதானம்) விசேஷ நிலை, (பெருகு ஆண்மை) ஓங்கி வளரும் ஆண்மைக் குணம் (மனோதிடம்), (பெறுதானம்) பெறுகின்ற தானப் பொருள்கள், (பகுமானம்) மிக்க பெருமை, சிவஞானம், (பல கோலம்) பல வகைத்தான அலங்காரங்கள் (புரி) இவை எல்லாம் ஏற்படுவதான தொழில்களுடனே செய்கைகளுடன்,
2. தாழ்வு அகன்றிடு வாழ்வும் வெம்பிணி நோயும் அங்கு அது இலாது உரம்தனில் ஆவதும் தளர் சாவு ஒழிந்திடு யோகமும் சிவபேறும் எந்த நிதானமும் செய் தராசு கண்டது போல் வரும் பொது ஆகும் என்று உனதுஇருதாளையே
(தாழ்வு அகன்றிடு) அவமானம் - குற்றம் இல்லாத வாழ்க்கையும், (வெம்பிணி நோயும் அங்கு அது இலாது) கொடிய பிணி நோய்கள் இல்லாமல் (உரம்தனில் ஆவதும்) (மனம், தேகம் இவை) வன்மையைப் பெற்றிருத்தலும் (தளர் சாவு ஒழிந்திடு) தளர்ச்சியும் சாவும் இல்லாததான (யோகமும்) பாக்கிய நிலையும், (சிவபேறும்) சிவனாரது திருவருட்பேறும், (எந்த நிதானமும்) எல்லா விதமான சமநிலையைச் (செய்) காட்டித் தருகின்ற (தராசு கண்டது போல்) துலாக் கோலைக் கண்டது போன்ற நிலையும் (வரும்) வந்து கூடும். (பொது ஆகும்) அந்நிலை யாரும் பகிரங்கமாகப் பார்க்கக் கூடியதாய் இருக்கும் - (என்று) என அறிந்து, உனது (இருதாளையே) இரண்டு திருவடிகளையே
3. ஓதின் நெச்சு அயரார் தினம் திரிகாலமும் தொழுவோர் விரும்பியது ஏதும் அன்புடனே தரும் க்ருபையாக வந்து அநுபூதி தந்து
முன் நூல் கடந்திடவே புரந்து அருள்கூரும் இங்கித சேவை
நம்பியபடி காணவே
(ஓதின்) ஓதுவதால், (நெச்சு அயரார்) மனம் சோர்வடையாதவராய்த் தினந்தோறும், (திரிகாலமும்) காலை, உச்சி, மாலை ஆக மூன்று வேளைகளிலும் (தொழுவோர்) உன்னைப் பணிபவர்கள் (விரும்பியது ஏதும்) விரும்பின எல்லாப் பொருள்களையும் அன்புடனே தருகின்ற கிருபையுடனே நீ வந்து (அநுபூதி) அனுபவஞானம் என்னும் செல்வத்தை அவர்களுக்குத் தந்து (முன்) பழைமையதான (நூல்) சாஸ்திரங்களை கலைஞானங்களைக் (கடந்திடவே) கடந்த நிலையில் (அவர்கள்) கூடுமாறு (அவர்களைப்) (புரந்து) நீ காப்பாற்றி (அருள்கூரும்) அருள்மிக்கு நீ தருகின்ற (இங்கித சேவை) இனிமையான தரிசனத்தை (நான்) நம்பின வண்ணமே காணும்படி
4. ஓகை வந்தனையாய் வணங்கிய ஏழை சிந்தையுளே
நினைந்திடு வேளை வந்து இனிதாய் வரம் தரவேணும் என்று அகமே வருந்தியும் ஓதினன் தினம் நான் விளம்புதல் நீ அறிந்தும் இது ஏன் இரங்கிலை அறிவேன் ஐயா
(ஓகை) மகிழ்ச்சியுடனும் (வந்தனையாய்) நன்றி பாராட்டுடனும் (உன்னை) வணங்கின (இந்த) ஏழையாகிய என்னுடைய (சிந்தையுளே) மனதிலே, (உன்னை) நான் நினைக்கும் (வேளை) சமயத்தில் (நீ) வந்து (இனிதாய்) மகிழ்வுடன் வரம் தந்தருள வேண்டுமென்று (அகமே) உள்ளத்திலே நான் வருத்தப்பட்டு (ஒதினன் தினம்) தினந்தோறும் ஓதி வேண்டினேன். அங்ஙனம் நான் (விளம்புதல்) முறையிடுவது (நீ அறிந்தும்) நீ அறிந்திருந்தும் (இது ஏன் இரங்கிலை) இவ்விஷயத்தில் நீ ஏன் இரக்கம் கொள்ளவில்லை! (அறிவேன் ஐயா) நீ இரங்கவில்லை என்பதை நான் அறிவேன், ஐயனே!
5. ஆதி அந்தம்அனாதி விந்துவு(ம்) நாதமும் பிரியா நிறைந்த அரூப இன்ப சொரூப சுந்தர சோதி மின்பொலி நீதியம் பொருள் ஆக நின்ற பராபரன் கருணாலயன் புலவோர் இறைச்சிட எதிர் காளி
(ஆதி) - முதல், (அந்தம்) - முடிவு (அனாதி) ஆதியின்மை, விந்துவும் (சுக்கிலம்) நாதமும் (சோணிதம்) (பிரியா நிறைந்த) பிரியாமல் நிறைந்ததாய், அரூபம் இன்ப சொரூபம் ஆக இரண்டு நிலையுங் கொண்ட (சுந்தர சோதி) அழகிய ºஜாதியாகவும், (மின்பொலி) ஒலி விளங்கும் (நீதியம் பொருள்) அம் நீதிப் பொருள் - அழகிய நீதிப் பொருளாகவும் நின்ற பராபர மூர்த்தி, (கருணாலயன்) கருணைக்கு இடமான மூர்த்தி, (புலவோர்) தேவர்கள் (இறைச்சிட) வணங்க, (எதிர்) - எதிர்த்து நின்ற காளி.
6. வாதாடலின் செகசே கிணங்கிண சேகுடண்ட மடாடமண்ட மதாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந் திமிதோ எனும் தொனியார் சிலம்பொலி தாள மிச்சிடவே நடம்புரி பாத நம்பரன்
அருள்பாலனே
(வாதாடலின்) தன்னுடன் வாதாடின போது செகசே கிணங்கிண... தாதிமிந்திமிதோ என்னும் (தொனியார்) ஒலி நிறைந்த (சிலம்பொலி) சிலம்பின் ஒலியும், தாளமும் (மிச்சிடவே) மிகும்படி (நடம்புரி) - நடனம் புரிந்த (பாதம்) திருவடிகளை உடைய நமது பரன் - சிவபிரான் அருளிய (பாலனே) குழந்தையே!
7. மாதிரம் திசையாக அந்தி கடாசலம் திரைமாசலம் புவி மாகம் அண்ட கடாகமும் பொனின் மேருவின் தலையே குலுங்கிட வாசம் ஒன்றிய கால் பொருந்துகள் வான் நிரம்பிடவே வரும்
குலுங்கிட கதிர்வடிவேலனே
(மாதிரம்) யானைகள் (திசை) எண் திசைகளிலும் (அந்தி) பொருந்தி, (கடாசலம்) மதசலம் விடவும், (திரைமாசலம்) கடலின் பெருநீரும், (புவி) உலகும், (மாகம்) விண்ணும், (அண்டகடாகம்) அண்டகோளஓடும், (பொனின்மேரு) பொன் மலையாகிய மேருமலையுடன் (தலை) சிகரங்களும் குலுங்கிட - குலுங்கவும் கலங்கிக் குலுங்கவும் (வாசம் ஒன்றிய) மலர்களின் நறுமணம் பொருந்திய, (கால்) காற்று (பொருந்துகள்) எழுப்பும் தூசி (வான் நிரம்பிட) ஆகாயத்தை அளாவி நிரம்பவும் வருகின்ற ஒளியும் கூர்மையும் கொண்ட வேலாயுதனே!
8. வானரம் கதிர் தாவு தண்டலை மேவு கொண்டல்ஐயூடு
நின்றலை மாஇனம் களிகூரும் நண்பொடு கோகநம் செறி வாவி சிந்திய பால் அருந்திய பேர் சிறந்த இருமூவர் விச்சையர் சூழ் பரங்கிரி முருகேசனே.
(வானரம்) குரங்குகள் (தாவு) தண்டலை (சோலைகளில்), (கதிர் தாவு) (தண்டலை) - சூரிய ஒளி பரவும் சோலைகளில் (மேவு) பொருந்திய (கொண்டல் ஐயூடு) காற்றின் அழகிடையே, நின்று அலைகின்ற, (மா இனம்) வண்டின் கூட்டம் (களி கூரும்) மகிழ்ச்சி மிக்க (நண்பொடு) ஆசையுடன் (கோகநம்) செந்தாமரைகளில், (செறி) - நெருங்கும், (வாவி) சரவணப் பொய்கையில் (சிந்திய) நீ உமையம்மையின் முலைப்பால் உண்டபொழுது சிந்தின (பால்) பாலை (அருந்திய ) மீன்களாயிருந்து உண்ட (பேர் சிறந்த) கீர்த்தி மிக்க (பராசர) முநிவர்களின் குமாரர்களாகிய (இரு மூவர்) தவத்தினர் ஆறுபேரும், விஞ்சையர் - வித்தியாதரர்களும் (சூழ்) சென்று வணங்கும் (பரங்கிரி) திருப்பரங்கிரி முருகேசனே!
