Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

thiruppazhani vakuppu

~ 6 min read

திருப்பழநி வகுப்பு

திருப்பழநி வகுப்பு (மூலம்)

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததனதனதானனா

எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும்
எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும்
எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே

எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத
எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும்
எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே

வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள்
வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ
ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே

வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர
கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ
ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர
சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே

தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை
யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத
தண்டைசிறு கிங்கிணிப லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா

செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை
சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ
றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே

சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ
மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு
செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.

திருப்பழநி வகுப்பு(பதம் பிரித்தது)

எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வும் கொடிய எந்த வசியும் சிறிதும் அணுகாமலே

எந்த இரவும் தனிமை எந்த வழியும் புகுத
எந்த இடமும் சபையில் எந்த முகமும் புகலும்
எந்த மொழியும் தமிழும் எந்த இசையும் பெருமை சிதறாமலே

வந்தனை செய்து உன் சரண(ம்) நம்புதல் புரிந்த அருள்
வந்து அநுதினம் தனிலும் நெச்சில் நினைவின் படி
வரம் தர உவந்து அருள் இதம் பெறுவதுஅன்றி நெவலை வீசியேடு..டு

வச்சவிழி சண்டன் உறுகின்ற பொழுதும் குமர
கந்த என நன்கு அறையவும் தெளிவு தந்து உயிர்
வருந்து பயமும் தனிமையும் தவிர அச்சல் எனவரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டம் என நின்று
முரசு திமிலை பம்பை துடி திண்டிமம் முழங்கும் ஒலி திசை வீறவே

தண்ட(ம்) அமர் மண்டு அசுரர் மண்டை நிணம்மென்று அலகை
உண்டு உமிழ்தல் கண்டு அமரர் இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா

செந்தளிரை முந்து படம் என்று உளம் மருண்டு நிறை
சந்தனவனம் குலவு மந்தி குதிகொண்டு அயல்
செறிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர்மடல் சாடவே

சிந்திய அரம்பை பலவின் கனியில் வந்து விழ
மென் கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்சிறு
செண்பக வனங்கள் வளர் தென் பழநியம் பதியின் ருகேசனே

பதவுரை

எவ்விதமான வினையும், பிறப்பும் அல்லது பாவமும் எவ்விதமான விஷமும், துன்பமும், எவ்விதமான பகையும், பழியும், எவ்விதமான குற்றமும், நோயும், எவ்விதமான இகழ்ச்சியும் - நிந்தையும், - கொடிதான - பொல்லாததான எந்த தன் வசப்படுத்தும் வசிய வித்தை எதுவும். (அல்லது தாழ்ச்சியும்) சிறிதளவும் அணுகாமலும்,

எந்த இரவிலும், தனியாக எந்த வழியினும் புகவும் - செல்லவும், எந்த இடத்திலும் சபையிலே எந்த இடத்தும் பேசும் எந்த பாக்ஷையும், எந்த தருணத்திலும் அல்லது எந்த வகையான இசையைப் பாடுதலிலும் என்னுடைய கீர்த்தி, சிதறுண்ணாமலும் - கெடாமலும், சேதப்படாமலும்

உன்னை நான் வந்தித்து (வணங்கி) புரிந்த உன் திருவடியை நம்பினதால், உன் திருவருள் வரப் பெற்று. தினம்தோறும், உள்ளத்தில் நினைத்த நினைவின்படியே வரத்தைத் தர மகிழ்ந்து நீ திருவருள் பாலிக்கும்

இன்பத்தைப் பெறுவதுடன் பின்னும், ஒரு பெரிய பாசக்கயிறு என்னும் வலையை வீசி,

  • வஞ்சக எண்ணத்தைக் காட்டும் கண்களை உடைய யமன் என்னைப் பிடிக்க வருகின்றபோதும், குமர, கந்த என்று(உன் திருநாமங்களை) நன்றாக சொல்வதற்கும், மனத் தெளிவை எனக்கு நீ கொடுத்து, யமனைக் கண்டு என் உயிர் வருந்தும் பயமும், - தனியாய் அவன் கையிற் சிக்கிப் போகும் துணையற்ற நிலையும் நீங்கும்படி, நீ பயப்படாதே என்று கூற வந்தருள வேண்டுகின்றேன்.

  • தந்தனன தந்தனன குண்டமட மண்டம் என்று ஒருங்கே நின்று முரசு, திமிலை பம்பை, துடி, திண்டிமம் என்ப்படும் (வாத்தியங்கள்) சப்திக்கும் ஒலியானது திசைகளில் பெருகிமிக

படையாக வந்த போரில் அல்லது தண்ட அமர் - அனாவசியமான போரில் நெருங்கின அசுரர்களுடைய - தலைப் பாகத்து கொழுப்பு இறைச்சியை, மென்றுதின்ற - பேய் (இது வேண்டாம் என்று) உண்டதை உமிழ்தலைக் கண்ட அமரர் - தேவர்களும்,இந்திரனும் வணங்குகின்ற திருவடிகளில் தண்டையும், சிறிய பாத கிங்கிணியும் ஒலிக்க பவனி வரும்திருவுலா வருகின்ற மயில்வாகன மூர்த்தியே!

  • முளைக்கும் பருவத்துச் (சந்தன மரத்து) மெல்லிய இலையை, முற்படுகின்ற பாம்பின் படம் என்று, உள்ளம் பயந்து (வெருவி), நிறை நிறைந்த சந்தனக்காட்டிற் உலவும் குரங்கு, குதி குதித்து ஓடி பக்கத்தில் நெருங்கி இருந்த கமுகு மரம் (பாக்கு மரத்தின் புடை) இடத்திலே போய் ஒளித்துக் கொள்ள, (அந்த மந்தி குதித்தலால்) தாழ்ந்து நிமிர்ந்த (அந்தக் கமுக மரத்தின் மடல்) கிளை தாக்கினதால் - மோதினதால்,

சிதறி விழுந்த வாழையானது பலாமரத்தின் பழத்தின் மேல் வந்து விழ, (அதன்) - மெதுவான பழம் உடைபட்ட சுளை வெளியிட்ட தேனைப் பருகி சிறு செண்பக மல்லிகைக் காடுகள் வளர்கின்ற அழகிய பழநிப்பதியில் வீற்றிருக்கும் முருகேசனே!

பதம் பிரித்து சொல் விளக்கம்

1. எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும் எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும் எந்த இகழ்வும் கொடிய எந்த வசியும் சிறிதும் அணுகாமலே

(எந்த வினையும்) எவ்விதமான வினையும், (பவமும்) பிறப்பும் அல்லது பாவமும் (எந்த விடமும்) எவ்விதமான விஷமும், (படரும்) துன்பமும், (எந்த இகலும்) எவ்விதமான பகையும், பழியும், (எந்த வழுவும்) எவ்விதமான குற்றமும், (பிணியும்) நோயும், (எந்த இகழ்வும்) எவ்விதமான இகழ்ச்சியும் - நிந்தையும், (கொடிய) - கொடிதான - பொல்லாததான எந்த (வசியும்) தன் வசப்படுத்தும் வசிய வித்தை எதுவும். (அல்லது தாழ்ச்சியும்) (சிறிதும்) சிறிதளவும் (அணுகாமலே) அணுகாமலும்,

2. எந்த இரவும் தனிமை எந்த வழியும் புகுத எந்த இடமும் சபையில் எந்த முகமும் புகலும் எந்த மொழியும் தமிழும் எந்த இசையும் பெருமை சிதறாமலே

எந்த (இரவும்) இரவிலும், (தனிமை) தனியாக எந்த வழியினும் (புகுத) புகவும் - செல்லவும், (எந்த இடமும்) எந்த இடத்திலும் (சபையில் எந்த முகமும்) சபையிலே எந்த இடத்தும் (புகலும்) பேசும் (எந்த மொழியும்) எந்த பாக்ஷையும், (தமிழும்), (எந்த விசையும்) எந்த தருணத்திலும் அல்லது (எந்த இசையும்) எந்த வகையான இசையைப் பாடுதலிலும் (பெருமை) என்னுடைய கீர்த்தி, (சிதறாமலே) சிதறுண்ணாமலும் - கெடாமலும், சேதப்படாமலும் (நான் இருக்க வேண்டி)

3. வந்தனை செய்து உன் சரண(ம்) நம்புதல் புரிந்த அருள் வந்து அநுதினம் தனிலும் நெச்சில் நினைவின் படி வரம் தர உவந்து அருள் இதம் பெறுவதுஅன்றி நெடு வலை வீசியே

(வந்தனை செய்து) உன்னை நான் வந்தித்து (வணங்கி) (உன் சரணம் நம்புதல்) புரிந்த உன் திருவடியை நம்பினதால், (அருள் வந்து) உன் திருவருள் வரப் பெற்று. (அநுதினம் தனிலும்) தினம்தோறும், (நெச்சில்) உள்ளத்தில் (நினைவின் படி) நினைத்த நினைவின்படியே (வரம்தர) வரத்தைத் தர (உவந்து அருள்) மகிழ்ந்து நீ திருவருள் பாலிக்கும் (இதம்

பெறுவதன்றி) இன்பத்தைப் பெறுவதுடன் பின்னும், ஒரு பெரிய (வலைவீசியே) பாசக்கயிறு என்னும் வலையை வீசி,

4. வச்சவிழி சண்டன் உறுகின்ற பொழுதும் குமர கந்த என நன்கு அறையவும் தெளிவு தந்து உயிர் வருந்து பயமும் தனிமையும் தவிர அச்சல் என வரவேணுமே

(வச்சவிழி) - வஞ்சக எண்ணத்தைக் காட்டும் கண்களை உடைய (சண்டன்) யமன் (உறுகின்ற பொழுதும்) என்னைப் பிடிக்க வருகின்றபோதும், குமர, கந்த என்று(உன் திருநாமங்களை) நன்றாக (அறையவும்) சொல்வதற்கும், (தெளிவு தந்து) மனத் தெளிவை எனக்கு நீ கொடுத்து, (உயிர் வருந்து பயமும்) யமனைக் கண்டு என் உயிர் வருந்தும் பயமும், (தனிமையும்) - தனியாய் அவன் கையிற் சிக்கிப் போகும் துணையற்ற நிலையும் (தவிர) நீங்கும்படி, (அச்சலென) நீ பயப்படாதே என்று கூற வந்தருள வேண்டுகின்றேன்.

5. தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி குண்டமட குண்டமட மண்டம் என நின்று முரசுதிமிலை பம்பை துடி திண்டிமம் முழங்கும் ஒலி திசை வீறவே

  • தந்தனன தந்தனன குண்டமட மண்டம் என்று ஒருங்கே நின்று முரசு, திமிலை பம்பை, துடி, திண்டிமம் என்ப்படும் (வாத்தியங்கள்) (முழங்கும் ஒலி) சப்திக்கும் ஒலியானது (திசை வீறவே) திசைகளில் பெருகிமிக

6. தண்ட(ம்) அமர் மண்டு அசுரர் மண்டை நிணம்மென்று அலகை உண்டு உமிழ்தல் கண்டு அமரர் இந்திரன் வணங்கு பத தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா

(தண்டம்) படையாக வந்த (அமர்) போரில் அல்லது தண்ட அமர் - அனாவசியமான போரில் (மண்டு) நெருங்கின (அசுரர்) அசுரர்களுடைய - (மண்டை நிணம்) தலைப் பாகத்து கொழுப்பு இறைச்சியை, (மென்று) மென்றுதின்ற (அலகை) - பேய் (இது வேண்டாம் என்று) உண்டதை உமிழ்தலைக் கண்ட அமரர் - தேவர்களும்,இந்திரனும் வணங்குகின்ற (பத) திருவடிகளில் தண்டையும், சிறிய பாத கிங்கிணியும் (புலம்பிட) ஒலிக்க (வரும் பவனி) - பவனி வரும்திருவுலா வருகின்ற மயில்வாகன மூர்த்தியே!

7. செந்தளிரை முந்து படம் என்று உளம் மருண்டு நிறை சந்தனவனம் குலவு மந்தி குதிகொண்டு அயல் செறிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே

(செந்தளிரை) - முளைக்கும் பருவத்துச் (சந்தன மரத்து) மெல்லிய இலையை, (முந்து) முற்படுகின்ற (படம் என்று) பாம்பின் படம் என்று, (உளம் மருண்டு) உள்ளம் பயந்து (வெருவி), நிறை (சந்தனவனம்) நிறைந்த சந்தனக்காட்டிற் (குலவு) உலவும் (மந்தி) குரங்கு, (குதிகொண்டு) குதி குதித்து ஓடி (அயல்) பக்கத்தில் (செறிந்த) நெருங்கி இருந்த (கமுகின் புடை) கமுகு மரம் (பாக்கு மரத்தின் புடை) இடத்திலே (பதுங்கிட) போய் ஒளித்துக் கொள்ள, (அந்த மந்தி குதித்தலால்) (வளைந்து) தாழ்ந்து நிமிர்ந்த (அந்தக் கமுக மரத்தின் மடல்) கிளை (சாடவே) தாக்கினதால் - மோதினதால்,

8. சிந்திய அரம்பை பலவின் கனியில் வந்து விழ மென்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு செண்பக வனங்கள் வளர் தென் பழநியம்பதியின் முருகேசனே

(சிந்திய) சிதறி விழுந்த (அரம்பை) வாழையானது பலாமரத்தின் பழத்தின் மேல் வந்து விழ, (அதன்) (மென்கனி) - மெதுவான பழம் (உடைந்த) உடைபட்ட சுளை (விண்ட) வெளியிட்ட (நறை கொண்டு) தேனைப் பருகி சிறு செண்பக மல்லிகைக் காடுகள் வளர்கின்ற (தென்) அழகிய பழநிப்பதியில் வீற்றிருக்கும் முருகேசனே!

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

93%
Reading Progress
Local First