கொலு வகுப்பு
முன்னுரை
முருகன் கொலு வீற்றிருக்கும் திரு ஓலக்கக் காட்சியைக் கூறுவதுகொலுக் கூட்டத்தினரின் வர்ணணை
கொலு வகுப்பு (மூலம்)
தனதன தனதன தனதன தனதன
தனந்த தனனா தனந்த தனனா
அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்
அருணனு மதியமும் அனல்ஏழு கனலியும்
அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால்
வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புழ்ந்த தொருபால்
வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்
இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்
இபமுக வனும்எழில் இளவல்கள் அனைவரும்
இயன்ற நெறியே முயன்ற தொருபால்
உருமலி குறளின மொடுவசு முசுமுகன்
உறைந்து பரிவாய் நிறைந்த தொருபால்
உடுவொடு நடவுப னிருவரு முறைமுறை
உகந்து தொழவே மிகுந்த தொருபால்
அடல்விடை முகன்அறை கதையுற வெகுசனம்
அதுங்கி அருகே ஒதுங்க ஒருபால்
அயன்முடி திருகிய வயவனு நியமமொ
டடங்கி வலமே தொடங்க ஒருபால்
மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்
மருவொடு துவர்இரு வருமிசை வலமொடு
வசிந்து மனமே கசிந்த தொருபால்
மிடலிறை விறலரி விமலர்கள் அருள்சுதன்
வியந்து விரைவாய் நயந்த தொருபால்
வெயில்விரி சுடரவன் மகனொடு மதிமகன்
விளம்பு முறையே கிளம்ப ஒருபால்
உடலொளி மவுனிகள் உடன்உப னிடதரும்
உளங் குளிரவே விளங்க ஒருபால்
உமைதிரு மகள்நில மகள்கலை மகளொடும்
உகந்தெ வருமே தொகுந்த தொருபால்
அதிபகி ரதிபயி ரவிபக வதிசசி
யரம்பை யருமே நிரம்ப ஒருபால்
அழகிய கவுரியொ டிலகிய வலவையும்
அடைந்து தயவாய் மிடைந்த தொருபால்
மதியர சருநிறை வசியரும் வினைஞரும்
மலிந்து முகமே பொலிந்த தொருபால்
வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்
விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள்
விளைந்த ஒலிவான் அலைந்த தொருபால்
விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை
விரிந்த நடமே புரிந்த தொருபால்
உதிர்தரு மலர்விரை யுறுபுகை ம்ருகமதம்
உமிழ்ந்த மணமே கமழ்ந்த தொருபால்
ஒழுகிய கிரிதொடு பணிதம தடுசுடர்
உவந்த ஒளியே நிவந்த தொருபால்
அரியக டெனமுக டளவிய ஒருகுடை
அமர்ந்த நிழலே சமைந்த தொருபால்
அருமட அனமென இருபுடை கவரிகள்
அசைந்த அழகே யிசைந்த தொருபால்
வரிசைசெய் துயலொடு வனமயில் சிவிறியின்
வயங்கு சிறுகால் இயங்க ஒருபால்
மறுகட லினில்எழு நிறைமதி அமுதென
வரிந்து பனிநீர் சொரிந்த தொருபால்
விரியிருள் வலிதரு கிரணம தெனநல
மிகுஞ்சு ழலில்வீ சுகுஞ்ச மொருபால்
வியன்மர கதமணி மிளிர்தரு களசெதிர்
விரைந்து நிரையாய் நிரைந்த தொருபால்
உரியவெ ளிலையுடன் உயரிய கமுகினில்
உகுந்த கனியே பகுந்த தொருபால்
உலகுள வனிதையர் அவரவர் விரதமொ
டுணர்ந்து கனியே கொணர்ந்த தொருபால்
(முருகவேளின் திருக்கோல வர்ணணை)
கேசாதி பாதம்
அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்த தொருபால்
அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்த தொருபால்
மறுவறு கடலென மருவுப னிருவிழி
வழிந்த அருளே பொழிந்த தொருபால்
வனைதரு மகரமு மணியணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்
இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்த தொருபால்
எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்
உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
யுடன்கொள் புரிநூல் கிடந்த தொருபால்
உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
உடைந்த உடைவாள் சிறந்த தொருபால்
அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால்
தேவியர்
அளவறு கலவியின் முழுகிய குறமகள்
அமர்ந்துள் ஒயிலாய் நிமிர்ந்த தொருபால்
வனதரு வினிலுறை சதமகன் அருள்மகள்
வதிந்து மணமே பொதிந்த தொருபால்
அடியார்கள்
வருமடி யவரிடம் வலியச நதம்வர
வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால்
நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
நினைந்து திருநீ றணிந்த தொருபால்
நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு
நினைந்து தரவே புனைந்த தொருபால்
தினகரன் உலவுச நிதியினில் இரவலர்
தெளிந்த தமிழே பொழிந்த தொருபால்
சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
திருந்த முருகோன் இருந்த கொலுவே.
கொலு வகுப்பு (பதம் பிரித்தது)
அரு மறையவன் முதல் அரி அரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்
அருணனு(ம்) மதியமும் அனல் எழுகனலியும்
அணங்கினொடு சூழ் கணங்கள் ஒருபால்
வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புகழ்ந்தது ஒருபால்
வயிரவரொடு படர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்
இருடிகள் எவர்களும் இனிய கினரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்
இப முகவனும் எழில் இளவல்கள் அனைவரும்
இயன்ற நெறியே முயன்றது ஒருபால்
உருமலி குறளினமொடு வசு முசுமுகன்
உறைந்து பரிவாய் நிறைந்தது ஒருபால்
உடுவொடு நடவு பனிருவரு முறைமுறை
உகந்து தொழவே மிகுந்தது ஒருபால்
அடல் விடைமுகன் அறை கதையுற வெகுசனம்
அதுங்கி அருகே ஒதுங்க ஒருபால்
அயன்முடி திருகிய வயவனு(ம்) நியமமொடு
அடங்கி வலமே தொடங்க ஒருபால்
மடல்புனை புகரொடு வரு பதினொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்
மருவொடு துவர் இருவரும் இசை வலமொடு
வசிந்து மனமே கசிந்தது ஒருபால்
மிடல் இறை விறலரி விமலர்கள் அருள் சுதன்
வியந்து விரைவாய் நயந்தது ஒருபால்
வெயில் விரிசுடரவன் மகனொடு மதிமகன்
விளம்பு முறையே கிளம்ப ஒருபால்
உடலொளி மவுனிகள் உடன் உபனிடதரும்
உளம் குளிரவே விளங்க ஒருபால்
உமை திருமகள் நிலமகள் கலைமகளொடும்
உகந்து எவருமே தொகுந்தது ஒருபால்
அதி பகிரதி பயிரவி பகவதி சசி
அரம்பையருமே நிரம்ப ஒருபால்
அழகிய கவுரியொடு இலகிய வலவையும்
அடைந்து தயவாய் மிடைந்தது ஒருபால்
மதியரசரு(ம்) நிறை வசியரும் வினைஞரும்
மலிந்து முகமே பொலிந்தது ஒருபால்
வரு சிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல் போல் முழங்க ஒருபால்
விதிமுறை கருதி ஐவகை புரி கருவிகள்
விளைந்த ஒலி வான் அளைந்தது ஒருபால்
விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை
விரிந்த நடமே புரிந்தது ஒருபால்
உதிர் தரு மலர் விரை உறுபுகை ம்ருகமதம்
உமிழ்ந்த மணமே கமழ்ந்தது ஒருபால்
ஒழுகிய கிரி தொடு பணி தமது அடு சுடர்
உவந்த ஒளியே நிவந்தது ஒருபால்
அரி அகடு என முகடு அளவிய ஒருகுடை
அமர்ந்த நிழலே சமைந்தது ஒருபால்
அரு மட(ம்) அ(ன்)னம் என இருபுடை கவரிகள்
அசைந்த அழகே இசைந்தது ஒருபால்
வரிசை செய் துயலொடு வனமயில் சிவிறியின்
வயங்கு சிறுகால் இயங்க ஒருபால்
மறு கடலினில் எழு நிறைமதி அமுது என
வரிந்து பனிநீர் சொரிந்தது ஒருபால்
விரி இருள் வலி தரு கிரணம் அது என நல
மிகும் சுழலில் வீசு குச்சம் ஒருபால்
வியன் மரகத மணி மிளிர் தரு களசு எதிர்
விரைந்து நிரையாய் நிரைந்தது ஒருபால்
உரிய வெளிலையுடன் உயரிய கமுகினில்
உகுந்த கனியே பகுந்தது ஒருபால்
உலகுள வனிதையர் அவரவர் விரதமொடு
உணர்ந்து கனியே கொணர்ந்தது ஒருபால்
(முருகவேளின் திருக்கோல வர்ணணை) கேசாதி பாதம்
அறு கதிரவர் என அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்தது ஒருபால்
அறுமதி என அறுதிருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்தது ஒருபால்
மறு அறு கடல் என மருவு பனிரு விழி
வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்
வனை தரு மகரமு(ம்) மணி அணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்
இறுகு பொன் மலையொடும் இடறு பனிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்தது ஒருபால்
எழிலியை அனைய பனிருகையில் அயில் முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்
உறுவரை அருவியை நிகர்தரும் உரமிசை
உடன்கொள் புரிநூல் கிடந்தது ஒருபால்
உரும் என இகலி முன் எதிர் பொரும் அவுணர் உள்
உடைந்த உடைவாள் சிறந்தது ஒருபால்
அநவரதமு(ம்) மறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால்
தேவியர்
அளவு அறு கலவியின் முழுகிய குறமகள்
அமர்ந்து உள் ஒயிலாய் நிமிர்ந்தது ஒருபால்
வன தருவினில் உறை சதமகன் அருள் மகள்
வதிந்து மணமே பொதிந்தது ஒருபால்
அடியார்கள்
வரும் அடியவரிடம் வலிய ச(ந்)நதம் வர
வளர்ந்த சபையே கிளர்ந்தது ஒருபால்
நினைவொடு பணிபவர் வினை துகள் படஎதிர்
நினைந்து திரு நீறணிந்தது ஒருபால்
நிறை மலரொடு நல கலவையும் உயர்குரு
நினைந்து தரவே புனைந்தது ஒருபால்
தினகரன் உலவு ச(ந்)நிதியினில் இரவலர்
தெளிந்த தமிழே பொழிந்தது ஒருபால்
சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
திருந்த முருகோன் இருந்த கொலுவே.
பதவுரை
அருமை வாய்ந்த மறைவல்ல பிரமன் முதலாக திருமால், சிவன், இந்திரன், மன்மதன், தேவர் கூட்டங்கள் ஒருபுறம் விளங்க
சூரியனும், சந்திரனும், நெருப்பு வீசூம் அக்கினியும், அச்சத்துடன் சுற்றி நிற்கும் கூட்டங்களும் (அல்லது பதினெண் கணத்தைச் சார்ந்தவர்களும்) ஒருபுறம் விளங்க
வருணபகவானும், (தென்மேற்குமூலைத் திக்குப் பாலகனாம்) நிருதியும், வழிபாட்டுடன் குபேரனும், (மிக ) மகிழ்ச்சியுடன் (அல்லது) நிரம்பப் போற்றிப் புகழ்ந்து - சொல்லும் புகழ் மொழிகள் ஒருபுறம் விளங்க
அட்ட பயிரவர்களுடன் உடன் வந்த கருடரும், நாகரும் வரங்கள் பெறும் பொருட்டு வேண்ட, வேண்டி ஒருபுறம் விளங்க
ரிஷி கணங்கள் யாவரும், இனிய இன்னிசை பாடி இனிமை யூட்டும் கின்னரர்களும் ஒன்று கூடி எதிர் நின்று ஒருபுறம் வணங்கி நிற்க
யானை முகங்கொண்ட கணபதியும், அழகு வாய்ந்த வீரவாகு ஆதிய தம்பிமார்கள் யாவரும் கூடிய வழியே அக் கூட்டத்தில் முயற்சித்து ஒருபால்
இருக்க -
பல உருவங்களுடனிருந்த பூதகணங்களுடன், அஷ்ட வசுக்களும், முசுகுந்த சக்ரவர்த்தியும் இருந்து அன்புப் பக்தியுடன் நிறைந்திருந்தனர் ஒருபுறத்தில்
நக்ஷத்திரங்களும், செல்கின்ற சூரியர் பன்னிருவரும் (அல்லது கணத் தலைவர்கள் - கணாக்கிர கண்ணியர் - பன்னிருவரும்) (அல்லது) சொல்லப்படுகின்ற மருத்துவர் அசுவினி தேவர்கள் இருவரும் தத்தமக்கு உரிய முறைப்படி - (தரிசித்து) மகிழ்ந்து தொழவே, அவர்கள் வணக்கமும் மிக்கு நின்றது ஒருபுறத்தே
வலிமை வாய்ந்த இடபத்தின் முகத்தை உடைய நந்திகேசுரர் (கூட்டத்தை விலக்கி ஒழுங்குற நிறுத்தவேண்டி) மோதும் (கதாயுதம்) தண்டாயுதம் மேலே படுதலால் - மிக்க
¤னக்கூட்டம் எல்லாம் ஒதுங்கி அருகிலேயே (ஒருபால்
ஒதுங்க) ஒருபுறமாய்த் தள்ளி நிற்க
பிரமனது தலையைத் கிள்ளித் திருகிப் பறித்த வீரனாகிய வயிரவரும் (பைரவரும்) ஒழுக்க முறைப்படி ஒடுங்கி, வலது பக்கத்தில் ஒருபுறத்தே முன் நிற்க
பூவிதழ் அணிந்துள்ள சுக்கிரனோடு வந்த பதினொரு ருத்திரர்களும் பக்கத்தில் இருந்து ஒருபுறம் நெருங்கி நிற்க
நறுமணம் பூசியுள்ள (தும்புரு நாரதர் இருவரும்) ராக வகைகளை திறலுடன் - வெற்றியுடன் கூறுபடுத்திப் பாடி - அல்லது இசை வலமோடு வசிந்து - ராகத் திறல் காட்டி இருந்து உள்ளம் உருகி நிற்பது ஒருபுறத்தில்
வலிமை வாய்ந்த இறைவன் - சிவனும், வீரம் வாய்ந்த திருமாலும் ஆகிய இரண்டு பரிசுத்த மூர்த்திகளும் பெற்ற ஹரிஹரபுத்திரனாம் - சாத்தனார் முருகவேளின் திரு ஓலக்கத்தை மெச்சி உடனே பாராட்டி நின்றது ஒருபுறத்தில்
வெயிலை வீசும் சூரியனுடைய மகனாம் சனியும், சந்திரனுடைய மகன் - புதனும் (கதிர்மகன், மதிமகன் என்று) சொல்லப்பட்ட அந்த முறைப்படி ஒருபுறம் தோன்றி நிற்க
தேகத்தை ஒளித்த - தேக ஞாபகம் அற்ற - (அல்லது தேகத்தின் தே¤ஸ் கொண்ட) மெளன ஞானிகளுடன் வேதம் வல்லோரும், உள்ளம் குளிர ஒருபுறம் விளங்க
உமாதேவி, பார்வதியானவள் இலக்குமி, பூதேவி, சரஸ்வதி ஆகிய இவர்களுடன் மகிழ்ந்து எல்லாரும் ஒன்றுகூடி இருந்தது ஒருபுறத்தில்
மேம்பட்ட பாகீரதி - கங்கை, துர்க்கை, தருமதேவதை, இந்திரன் மனைவி இந்திராணி, தெய்வமகளிர் ஒருபுறம் நிறைந்திருக்க
அழகிய காளிதேவியுடன் இருந்து விளங்கும் (வலவையும்) டாகினியும் (அல்லது கவுரியுடன்) பார்வதியுடன் விளங்கும் (வலவையும்) (காளியும்) அல்லது கணபதியின் தேவியாகிய வல்லபையும் அங்கு வந்து சேர்ந்து அன்புடனே ஒருபுறம் கலந்து நிற்க
அறிவு நிறை வேந்தரும் (க்ஷத்திரியரும்), நீதிமான்களVகிய வைசியர்களும், தொழிலாளிகளும் நிரம்பிக்கூடி மலர்ந்த முகத்துடன் ஒருபால்
இருக்க
அங்குக் கூடிய சிவனடியவர்கள் எல்லாம் ஹரஹர என்று முறையீடு செய்பவர்கள்போல - ஓலமிடுபவர்கள் போலக் கடல் ஒலிபோல முழக்கஞ்செய்து ஒருபுறம் இருக்க
(இசை நூல்களின்) விதிகளின் இலக்கணமுறையைக் கவனித்து பஞ்ச வாத்தியங்களும் - தோற்கருவி, தொளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகை இசைக் கருவிகளும் எழுப்பின ஒலி ஆகாயத்தை எட்டிக் கலந்தது ஒருபுறம்
பலவகையில் நடனப் பெண்கள் தாள ஒத்து இலக்கணத்துக்குப் பொருந்த விரிவான வகையில் நடனங்களை ஆடினது ஒருபுறத்தே
உதிர்ந்து விழுந்த மலர்களின், நறுமணம் பொருந்திய புகை (மணமும்), கஸ்தூரி வெளிப்படுத்தின மணமும் வீசினது ஒருபுறத்தே
பரந்திருந்த அஷ்டகிரிகளையும் தொட்டிருந்த பரிசித்திருந்த அஷ்ட நாகங்கள் (தமது தமது ரத்னங்களால்) கொடுத்த விசின ºஜாதியின் உவந்த ஒளியே - இன்பகரமான ஒளியே ஒருபுறம் மேம் பட்டெழுந்தது
உட்டுளையை உடைய வயிறுபோல ஆகாய உச்சியை எட்டுகின்ற - ஆகாய விரிவு போன்ற - அண்ட முகடுபோல விரிந்த ஒரு குடையின் பொருந்தின நிழலே ஒருபுறம் அமைந்து நிரம்பியது
அருமை வாய்ந்த இளமைகொண்ட அன்னப்பட்சிகள் அசைவதுபோல இரண்டு பக்கத்திலும் ) சாமரங்கள் அல்லது - அன்னப்பட்சிகள் போன்ற பெண்கள் இரண்டு பக்கத்திலும் வீசின சாமரங்கள் அசைந்த அழகானது ஒருபுறம் பொருந்தியிருந்தது
வரிசையாகப் பொருந்தின - ஒழுங்காக அமைந்த அசைவுடனே (வீசப்பட்ட) அழகிய மயில் விசிறிகளினின்றும் தோன்றும் வெளிப்படும் மெல்லிய காற்றானது ஒருபுறம் அசைய
கடையும்போது மறுகுதலை (சுழலுதலைக்) கொண்ட (திருப்பாற்) கடலினின்றும் எழுந்த பூரணசந்திரன் தரும்
அமுதம்போல மூடிப் பொதிந்து வைத்திருந்த பன்னீரைச் ஒருபுறம் சொரிந்து நிற்க
விரிந்த பலமாய் விளங்கும் ஒளி போல இன்பத்தை மிகுதியாகத் தரும் சுழற்றி வீசப்படுகின்ற ஈயோட்டி ஒருபுறம் (வீசப்பட)
அதிசயிக்கத் தக்க மரகத ரத்னம் ஒளிவீசும் தாம்பூலம் எடுக்கும் கலங்கள் எதிரிலே வேகத்துடன் ஒழுங்காகக் கொண்டுவரப்பட்டு வரிசையாய் அமைந்தன ஒருபுறத்தில்
தகுதியான வெள்ளிலையுடன் - வெற்றிலையுடன் உயர்ந்த பாக்குமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களின் பிளவுகள் (பாக்கு) ஒருபுறம் இருக்க
உலகில் உள்ள பெண்கள் தாம் தாம் கொண்ட விரதப்படி ஞாபகமாய்த் தெளிவுடனே பழவர்க்கங்களைக் ஒருபுறம் கொண்டுவந்து வைக்க :
இவ்வாறெல்லாம் கொலு அலங்காரங்கள் விளங்க
முருகன் கொலு வீற்றிருந்த அழகு பின் வருமாறு : 1கேசாதிபாதம் (அடி 33 முதல் 41 முடிய)
ஆறு சூரியர்கள் போன்று (பெருமான் அணிந்திருந்த) ஆறு ரத்னக் க்ரீடங்களும் நெருங்கி ஒளியே பரவி நின்றது ஒருபுறத்தே
ஆறு சந்திரன் போன்று ஆறு அழகிய திருமுகங்களாகிய நூறு இதழ்களைக்கொண்டு மலர்ந்துள்ள தாமரை மலர்கள் பொலிந்து நின்றன ஒருபுறம்
குற்றம் அற்ற - மாசு இல்லாத கடல் போலப் பரந்துள்ளது என்று சொல்லும்படி பொருந்திய பன்னிரண்டு கண்களினின்றும் வழிந்த திரு அருளே பொழிந்து விளங்கின ஒருபுறத்தே
அணிந்துள்ள குறங்கு செறியணியும், அல்லது மகரக் குழையும், மகரகுண்டலமும், இரத்தினமயமான ஆபரணங்களும், ஒளிவிடும், குழையே பொற் குழைகளும் ஒருபுறம் பிரகாசிக்க
திரண்டு இறுகியுள்ள உறுதியாயுள்ள மேருமலையையும் மீறி நிற்கின்ற பன்னிரண்டு புயங்களும் பொருந்தி பெரிய வானத்தின் அளவுக்கு ஒருபுறம் அசைந்து விளங்கி நிற்க
(கொடையில்) எழிலியை - மேகத்தை ஒத்தனவான
பன்னிரண்டு திருக்கரங்களிலும் வேல்முதலான விளங்குகின்ற ஆயுதங்களே ஒருபுறம் விளங்க -
(வரையுறு அருவியை) மலையினின்று ஒழகும் அருவியை ஒத்து விளங்குகின்ற மார்பின் மீது பொருந்தியிருந்த முப்புரிநூல் - பூணூல் ஒருபுறம் கிடந்து விளங்க
இடிபோல பகைத்து, முன்பு எதிர்வந்து சண்டை செய்த அவுணர்களுடைய உள்ளம் உடையும்படி செய்த ஒருபுறம் சிறப்புற்றிருந்தது
எப்போதும் வேத ஒலியை வெளியிடுகின்ற சிலம்பு அசைகின்ற இரண்டு திருவடிகளும் ஒருபுறம் அசைந்து விளங்க
தேவியர்
அளவு கடந்த காம நுகர்ச்சியில் வள்ளியம்மை உள் அமர்ந்து - உள்ளம் விரும்பி - உள்ளத்தில் விருப்பத்துடன் ஒய்யாரமாய் - உல்லாச நிலையுடன் உயர்வுடன் விளங்கி நின்ற நிலை ஒருபுறம்
அழகிய கற்பக விருக்ஷ நிழலில் அல்லது கற்பக (வன) சோலை நிழலில் அமர்ந்திருக்கும் இந்திரன் வளர்த்த மகள் தேவசேனை பக்கத்திலிருக்க
மகிழ்ச்சியே - நறுமணமே ஒருபுறம் நிறைந்திருக்க -
அடியார்கள்
வந்து கூத்தாடும் அடியார் உள்ளத்திலே பலமான தெய்வ ஆவேச உணர்ச்சி (பக்திக் குதூகலம்) வரும்படி விருத்தியடைந்துள்ள (ப¤னை) சபைகள் ஒருபுறம் பிரகாசித்து ஓங்கின
மறதியின்றி - கருத்துடன் வணங்குவோருடைய வினைகள் பொடிபடும்படி அவர் கருத்தை முன்னதாக மனத்திற் கொண்டு திருநீற்றுப் ப்ரசாதத்தை தந்து ஒருபுறம் அணிவிக்க
நிரம்ப மலர்களுடன் கலவையும் நறுமணமுள்ள சந்தனக் குழம்பையும் மேன்மையாளரான குருவை முருகவேளின் திருவடிகளைத் தியானித்துத் தர, (குரு - பிரகஸ்பதி தர) அவற்றைப் அணிந்து நிற்பது (அணிந்து நிற்பவர்) ஒருபுறத்தே விளங்க
சூரியன் ஒளி பிரகாசிக்கின்ற சந்நிதியினில் முருகவேளின் முன்னிலையிலே முருகன்பால் குறை வேண்டி நிற்பவர்கள் தெளிவான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிப்பொழிதல் ஒருபுறத்தே விளங்க
சிவஸ்தலமாகிய திருப்பரங்குன்றத்திலே ஒப்பற்ற சிவபிரானது திருக்கோலத்துடனே செவ்விய நிலையிலே - அழகு பெற, முருகவேள் வீற்றிருந்த கொலுவானது இங்ஙனம் விளங்கிப்பொலிந்தது.
பதம் பிரித்து சொல் விளக்கம்
1அரு மறையவன் முதல் அரி அரன் மகபதி அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்
(அரு மறையவன் ) அருமை வாய்ந்த மறைவல்ல பிரமன் முதலாக (அரி) திருமால், (அரன்) சிவன், (மகபதி) இந்திரன், (அனங்கன்) மன்மதன், (இமையோர் இனங்கள்) தேவர் கூட்டங்கள் (ஒருபால்) ஒருபுறம் விளங்க
2அருணனு(ம்) மதியமும் அனல் எழு கனலியும் அணங்கினொடு சூழ் கணங்கள் ஒருபால்
(அருணனும்) சூரியனும், (மதியமும்) சந்திரனும், (அனல் எழு) நெருப்பு வீசூம் (கனலியும்) அக்கினியும், (அணங்கினொடு) அச்சத்துடன் (சூழ்) சுற்றி நிற்கும் (கணங்கள்) கூட்டங்களும் (அல்லது பதினெண் கணத்தைச் சார்ந்தவர்களும்) (ஒருபால்) ஒருபுறம் விளங்க
3வருணனும் நிருதியும் வழியொடு தனதனும் மகிழ்ந்து மிகவே புகழ்ந்தது ஒருபால்
வருணபகவானும், (தென்மேற்குமூலைத் திக்குப் பாலகனாம்) நிருதியும், (வழியொடு) வழிபாட்டுடன் (தனதனும்) குபேரனும், (மிக ) மகிழ்ச்சியுடன் (அல்லது) (மிகவே புகழ்ந்து) நிரம்பப் போற்றிப் புகழ்ந்து - சொல்லும் புகழ் மொழிகள் ஒருபுறம் விளங்க
4வயிரவரொடு படர் உவணரும் உரகரும் வரங்கள் பெறவே இரங்க ஒருபால்
(வயிரவரொடு) அட்ட பயிரவர்களுடன் (படர்) உடன் வந்த (உவணரும்) கருடரும், (உரகரும்) நாகரும் (வரங்கள் பெறவே) வரங்கள் பெறும் பொருட்டு (இரங்க) வேண்ட, வேண்டி ஒருபுறம் விளங்க
5இருடிகள் எவர்களும் இனிய கினரர்களும் இணங்கி எதிரே வணங்க ஒருபால்
(இருடிகள் எவர்களும்) ரிஷி கணங்கள் யாவரும், இனிய இன்னிசை பாடி இனிமை யூட்டும் கின்னரர்களும் (இணங்கி) ஒன்று கூடி எதிர் நின்று ஒருபுறம் வணங்கி நிற்க
6இப முகவனும் எழில் இளவல்கள் அனைவரும் இயன்ற நெறியே முயன்றது ஒருபால்
(இப முகவனும்) யானை முகங்கொண்ட கணபதியும், (எழில்) அழகு வாய்ந்த (இளவல்கள்) வீரவாகு ஆதிய தம்பிமார்கள் யாவரும் (இயன்ற நெறியே) கூடிய வழியே அக் கூட்டத்தில் (முயன்றது) முயற்சித்து ஒருபால்
இருக்க -
7உருமலி குறளினமொடு வசு முசுமுகன் உறைந்து பரிவாய் நிறைந்தது ஒருபால்
(உருமலி குறளினமொடு) பல உருவங்களுடனிருந்த பூதகணங்களுடன், (வசு) அஷ்ட வசுக்களும், ( முசுமுகன்) முசுகுந்த சக்ரவர்த்தியும் (உறைந்து) இருந்து (பரிவாய்) அன்புப் பக்தியுடன் (நிறைந்தது ஒருபால்) நிறைந்திருந்தனர் ஒருபுறத்தில்
8உடுவொடு நடவு பனிருவரு முறைமுறை உகந்து தொழவே மிகுந்தது ஒருபால்
(உடுவொடு) நக்ஷத்திரங்களும், (நடவு) செல்கின்ற சூரியர் பன்னிருவரும் (அல்லது கணத் தலைவர்கள் - கணாக்கிர கண்ணியர் - பன்னிருவரும்) (அல்லது) (பன்னு) சொல்லப்படுகின்ற (இருவர்) மருத்துவர் அசுவினி தேவர்கள் இருவரும் (முறைமுறை) தத்தமக்கு உரிய முறைப்படி - (தரிசித்து) (உகந்து) மகிழ்ந்து தொழவே, (மிகுந்தது ஒருபால்) அவர்கள் வணக்கமும் மிக்கு நின்றது ஒருபுறத்தே
9அடல் விடைமுகன் அறை கதையுற வெகுசனம் அதுங்கி அருகே ஒதுங்க ஒருபால்
(அடல்) வலிமை வாய்ந்த (விடைமுகன்) இடபத்தின் முகத்தை உடைய நந்திகேசுரர் (கூட்டத்தை விலக்கி ஒழுங்குற நிறுத்தவேண்டி) (அறை) மோதும் (கதை) (கதாயுதம்) தண்டாயுதம் (உற) மேலே படுதலால் - (வெகுசனம்) மிக்க
¤னக்கூட்டம் எல்லாம் (அதுங்கி) ஒதுங்கி (அருகே) அருகிலேயே (ஒதுங்க ஒருபால்) (ஒருபால்
ஒதுங்க) ஒருபுறமாய்த் தள்ளி நிற்க
10அயன்முடி திருகிய வயவனு (ம்) நியமமொடு அடங்கி வலமே தொடங்க ஒருபால்
(அயன் முடி) பிரமனது தலையைத் (திருகிய) கிள்ளித் திருகிப் பறித்த (வயவனும்) வீரனாகிய வயிரவரும் (பைரவரும்) (நியமமொடு) ஒழுக்க முறைப்படி (அடங்கி) ஒடுங்கி, (வலமே) வலது பக்கத்தில் (ஒருபால்
தொடங்க) ஒருபுறத்தே முன் நிற்க
11மடல்புனை புகரொடு வரு பதினொருவரும் மருங்கின் உறவே நெருங்க ஒருபால்
(மடல் புனை) பூவிதழ் அணிந்துள்ள (புகரொடு) சுக்கிரனோடு (வரு) வந்த (பதினொருவரும்) பதினொரு ருத்திரர்களும் (மருங்கின் உறவே) பக்கத்தில் இருந்து (ஒருபால்
நெருங்க) ஒருபுறம் நெருங்கி நிற்க
12மருவொடு துவர் இருவரும் இசை வலமொடு வசிந்து மனமே கசிந்தது ஒருபால்
(மருவொடுதுவர்) நறுமணம் பூசியுள்ள (இருவரும்) (தும்புரு நாரதர் இருவரும்) (இசை) ராக வகைகளை (வலமோடு) திறலுடன் - வெற்றியுடன் (வசிந்து) கூறுபடுத்திப் பாடி - அல்லது இசை வலமோடு வசிந்து - ராகத் திறல் காட்டி இருந்து (மனமே கசிந்தது) உள்ளம் உருகி நிற்பது (ஒருபால்) ஒருபுறத்தில்
13மிடல் இறை விறலரி விமலர்கள் அருள் சுதன் வியந்து விரைவாய் நயந்தது ஒருபால்
(மிடல் இறை) வலிமை வாய்ந்த இறைவன் - சிவனும், (விறல் அரி) வீரம் வாய்ந்த திருமாலும் ஆகிய இரண்டு (விமலர்கள்) பரிசுத்த மூர்த்திகளும் (அருள்) பெற்ற (சுதன்) ஹரிஹரபுத்திரனாம் - சாத்தனார் (வியந்து) முருகவேளின் திரு ஓலக்கத்தை மெச்சி (விரைவாய்) உடனே (நயந்தது) பாராட்டி நின்றது ஒருபுறத்தில்
14வெயில் விரி சுடரவன் மகனொடு மதிமகன் விளம்பு முறையே கிளம்ப ஒருபால்
(வெயில் விரி) வெயிலை வீசும் (சுடரவன்) சூரியனுடைய (மகனொடு) மகனாம் சனியும், (மதி) சந்திரனுடைய மகன் - புதனும் (விளம்பும் முறையே) (கதிர்மகன், மதிமகன் என்று) சொல்லப்பட்ட அந்த முறைப்படி (கிளம்ப ஒருபால்) ஒருபுறம் தோன்றி நிற்க
15உடலொளி மவுனிகள் உடன் உபனிடதரும் உளம் குளிரவே விளங்க ஒருபால்
(உடல் ஒளி மவுனிகளுடன்) தேகத்தை ஒளித்த - தேக ஞாபகம் அற்ற - (அல்லது தேகத்தின் தே¤ஸ் கொண்ட) மெளன ஞானிகளுடன் (உபநிடதரும்) வேதம் வல்லோரும், (தமது) உள்ளம் குளிர (இருந்து) ஒருபுறம் விளங்க
16உமை திருமகள் நிலமகள் கலைமகளொடும் உகந்து எவருமே தொகுந்தது ஒருபால்
(உமை) உமாதேவி, பார்வதியானவள் (திருமகள்) இலக்குமி, (நிலமகள்) பூதேவி, (கலைமகள்) சரஸ்வதி ஆகிய இவர்களுடன் (உகந்து) மகிழ்ந்து (எவருமே தொகுந்தது ஒருபால்) எல்லாரும் ஒன்றுகூடி இருந்தது ஒருபுறத்தில்
17அதி பகிரதி பயிரவி பகவதி சசி அரம்பையருமே நிரம்ப ஒருபால்
(அதி) மேம்பட்ட (பகிரதி) பாகீரதி - கங்கை, (பயிரவி) துர்க்கை, (பகவதி) தருமதேவதை, (சசி) இந்திரன் மனைவி இந்திராணி, (அரம்பையருமே) தெய்வமகளிர் (நிரம்ப ஒருபால்) ஒருபுறம் நிறைந்திருக்க
18அழகிய கவுரியொடு இலகிய வலவையும்
அடைந்து தயவாய் மிடைந்தது ஒருபால்
(அழகிய கவுரியொடு) அழகிய காளிதேவியுடன் (இலகிய) இருந்து விளங்கும் (வலவையும்) டாகினியும் (அல்லது கவுரியுடன்) பார்வதியுடன் விளங்கும் (வலவையும்) (காளியும்) அல்லது கணபதியின் தேவியாகிய வல்லபையும் (அடைந்து) அங்கு வந்து சேர்ந்து (தயவாய்) அன்புடனே (மிடைந்தது ஒருபால்) ஒருபுறம் கலந்து நிற்க
19மதியரசரு(ம்) நிறை வசியரும் வினைஞரும்
மலிந்து முகமே பொலிந்தது ஒருபால்
(மதி அரசரும்) அறிவு நிறை வேந்தரும் (க்ஷத்திரியரும்), (நிறை வசியரும்) நீதிமான்களVகிய வைசியர்களும், (வினைஞரும்) தொழிலாளிகளும் (மலிந்து) நிரம்பிக்கூடி (முகமே பொலிந்தது ஒருபால்) மலர்ந்த முகத்துடன் ஒருபால்
இருக்க
20வரு சிவன் அடியவர் அரகர எனமுறை வழங்கு கடல் போல் முழங்க ஒருபால்
(வருசிவன் அடியவர்) அங்குக் கூடிய சிவனடியவர்கள் எல்லாம் ஹரஹர என்று (முறை வழங்கு கடல்போல்) முறையீடு செய்பவர்கள்போல - ஓலமிடுபவர்கள் போலக் கடல் ஒலிபோல முழக்கஞ்செய்து ஒருபுறம் இருக்க
21விதிமுறை கருதி ஐவகை புரி கருவிகள் விளைந்த ஒலி வான் அளைந்தது ஒருபால்
(விதிமுறை கருதி) (இசை நூல்களின்) விதிகளின் இலக்கணமுறையைக் கவனித்து (ஐவகை புரி கருவிகள்) பஞ்ச வாத்தியங்களும் - தோற்கருவி, தொளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகை இசைக் கருவிகளும் (விளைந்த ஒலி ) எழுப்பின ஒலி (வான் அளைந்தது) ஆகாயத்தை எட்டிக் கலந்தது ஒருபுறம்
22விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை விரிந்த நடமே புரிந்தது ஒருபால்
(விதமுடன்) பலவகையில் (அபிநய வனிதையர்) நடனப் பெண்கள் (சதிமுறை) தாள ஒத்து இலக்கணத்துக்குப் பொருந்த (விரிந்த) விரிவான வகையில் நடனங்களை ஆடினது ஒருபுறத்தே
23உதிர் தரு மலர் விரை உறுபுகை ம்ருகமதம் உமிழ்ந்த மணமே கமழ்ந்தது ஒருபால்
உதிர்ந்து விழுந்த மலர்களின் (விரை) , நறுமணம் பொருந்திய புகை (மணமும்), (ம்ருகமதம்) கஸ்தூரி (உமிழ்ந்த) வெளிப்படுத்தின மணமும் வீசினது ஒருபுறத்தே
24ஒழுகிய கிரி தொடு பணி தமது அடு சுடர் உவந்த ஒளியே நிவந்தது ஒருபால்
(ஒழுகிய) பரந்திருந்த (கிரி) அஷ்டகிரிகளையும் (தொடு) தொட்டிருந்த பரிசித்திருந்த (பணி) அஷ்ட நாகங்கள் (தமது தமது ரத்னங்களால்) (அடு) கொடுத்த விசின (சுடர்) ºஜாதியின் உவந்த ஒளியே - இன்பகரமான ஒளியே (நிவந்தது ஒருபால்) ஒருபுறம் மேம் பட்டெழுந்தது
25அரி அகடு என முகடு அளவிய ஒருகுடை அமர்ந்த நிழலே சமைந்தது ஒருபால்
(அரி அகடு என) உட்டுளையை உடைய வயிறுபோல (முகடு அளவிய) ஆகாய உச்சியை எட்டுகின்ற - ஆகாய விரிவு போன்ற - அண்ட முகடுபோல விரிந்த ஒரு குடையின் (அமர்ந்த நிழலே) பொருந்தின நிழலே (சமைந்தது ஒருபால்) ஒருபுறம் அமைந்து நிரம்பியது
26அரு மட(ம்) அனம் என இருபுடை கவரிகள் அசைந்த அழகே இசைந்தது ஒருபால்
அருமை வாய்ந்த (மடம்) இளமைகொண்ட (அனம் என) அன்னப்பட்சிகள் அசைவதுபோல இரண்டு பக்கத்திலும் (கவரிகள்) (வெண் ) சாமரங்கள் அல்லது - அன்னப்பட்சிகள் போன்ற பெண்கள் இரண்டு பக்கத்திலும் வீசின சாமரங்கள் அசைந்த அழகானது (இசைந்தது ஒருபால்) ஒருபுறம் பொருந்தியிருந்தது
27வரிசை செய் துயலொடு வனமயில் சிவிறியின் வயங்கு சிறுகால் இயங்க ஒருபால்
(வரிசை செய்) வரிசையாகப் பொருந்தின - ஒழுங்காக அமைந்த (துயலொடு) அசைவுடனே (வீசப்பட்ட) (வனம்) அழகிய (மயில் சிவிறியின்) மயில் விசிறிகளினின்றும் (வயங்கு) தோன்றும் வெளிப்படும் (சிறுகால்) மெல்லிய காற்றானது (இயங்க ஒருபால்) ஒருபுறம் (இயங்க) அசைய
28மறு கடலினில் எழு நிறைமதி அமுது என வரிந்து பனிநீர் சொரிந்தது ஒருபால்
(மறு கடலினில்) கடையும்போது மறுகுதலை (சுழலுதலைக்) கொண்ட (திருப்பாற்) கடலினின்றும் (எழு) எழுந்த (நிறைமதி) பூரணசந்திரன் தரும்
(அமுதென) அமுதம்போல (வரிந்து) மூடிப் பொதிந்து வைத்திருந்த பன்னீரைச் (சொரிந்தது ஒருபால்) ஒருபுறம் சொரிந்து நிற்க
29விரி இருள் வலி தரு கிரணம் அது என நல மிகும் சுழலில் வீசு குச்சம் ஒருபால்
விரிந்த (இருளில்) (வலிதரு) பலமாய் விளங்கும் (கிரணமதென) ஒளி போல (நலமிகும்) இன்பத்தை மிகுதியாகத் தரும் (சுழலில் வீசு) சுழற்றி வீசப்படுகின்ற (குச்சம்) ஈயோட்டி ஒருபுறம் (வீசப்பட)
30வியன் மரகத மணி மிளிர் தரு களசு எதிர் விரைந்து நிரையாய் நிரைந்தது ஒருபால்
(வியன்) அதிசயிக்கத் தக்க மரகத ரத்னம் ஒளிவீசும் (களசு) தாம்பூலம் எடுக்கும் கலங்கள் எதிரிலே (விரைந்து நிரையாய்) வேகத்துடன் ஒழுங்காகக் கொண்டுவரப்பட்டு வரிசையாய் அமைந்தன ஒருபுறத்தில்
31உரிய வெளிலையுடன் உயரிய கமுகினில் உகுந்த கனியே பகுந்தது ஒருபால்
(உரிய) தகுதியான (வெளிலையுடன்) வெள்ளிலையுடன் - வெற்றிலையுடன் (உயரிய) உயர்ந்த (கமுகினில்) பாக்குமரத்திலிருந்து (உகுந்த கனியே) உதிர்ந்த பழங்களின் (பகுந்தது) பிளவுகள் (பாக்கு) ஒருபுறம் இருக்க
32உலகுள வனிதையர் அவரவர் விரதமொடு உணர்ந்து கனியே கொணர்ந்தது ஒருபால்
உலகில் உள்ள (வனிதையர்) பெண்கள் (அவரவர் விரதமொடு) தாம் தாம் கொண்ட விரதப்படி (உணர்ந்து) ஞாபகமாய்த் தெளிவுடனே (கனியே) பழவர்க்கங்களைக் (கொணர்ந்தது ஒருபால்) ஒருபுறம் கொண்டுவந்து வைக்க :
இவ்வாறெல்லாம் கொலு அலங்காரங்கள் விளங்க
முருகன் கொலு வீற்றிருந்த அழகு பின் வருமாறு : 1கேசாதிபாதம் (அடி 33 முதல் 41 முடிய)
33அறு கதிரவர் என அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்தது ஒருபால்
(அறு கதிரவரென) ஆறு சூரியர்கள் போன்று (அறு மணி மவுலிகள்) (பெருமான் அணிந்திருந்த) ஆறு ரத்னக் க்ரீடங்களும் (அடர்ந்து) நெருங்கி (வெயிலே) ஒளியே (படர்ந்தது) பரவி நின்றது ஒருபுறத்தே
34அறுமதி என அறுதிருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்தது ஒருபால்
(அறு மதியென) ஆறு சந்திரன் போன்று (அறுதிருமுக) ஆறு அழகிய திருமுகங்களாகிய (சததள) நூறு இதழ்களைக்கொண்டு (அலர்ந்த) மலர்ந்துள்ள தாமரை மலர்கள் (மலர்ந்தது) பொலிந்து நின்றன ஒருபுறம்
35மறு அறு கடல் என மருவு பனிரு விழி வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்
(மறு அறு) குற்றம் அற்ற - மாசு இல்லாத கடல் போலப் பரந்துள்ளது என்று சொல்லும்படி பொருந்திய பன்னிரண்டு கண்களினின்றும் வழிந்த திரு அருளே பொழிந்து விளங்கின ஒருபுறத்தே
36வனை தரு மகரமு(ம்) மணி அணி பணிகளும் வயங்கு குழையே தயங்க ஒருபால்
(வனைதரு) அணிந்துள்ள (மகரமும்) குறங்கு செறியணியும், அல்லது மகரக் குழையும், மகரகுண்டலமும், (மணியணிபணிகளும்) இரத்தினமயமான ஆபரணங்களும், (வயங்கு) ஒளிவிடும், குழையே பொற் குழைகளும் (தயங்க ஒருபால்) ஒருபுறம் பிரகாசிக்க
37இறுகு பொன் மலையொடும் இடறு பனிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்தது ஒருபால்
(இறுகு பொன் மலையொடும்) திரண்டு இறுகியுள்ள உறுதியாயுள்ள மேருமலையையும் (இடறு) மீறி நிற்கின்ற பன்னிரண்டு புயங்களும் பொருந்தி பெரிய வானத்தின் அளவுக்கு (அசைந்தது ஒருபால்) ஒருபுறம் அசைந்து விளங்கி நிற்க
38எழிலியை அனைய பனிருகையில் அயில் முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்
(எழிலியை அனைய) (கொடையில்) எழிலியை - மேகத்தை ஒத்தனவான
(பன்னிரு கையில்) பன்னிரண்டு திருக்கரங்களிலும் (அயில்) வேல்முதலான (இலங்குபடையே) விளங்குகின்ற ஆயுதங்களே (துலங்க ஒருபால்) ஒருபுறம் விளங்க -
39உறுவரை அருவியை நிகர்தரும் உரமிசை உடன்கொள் புரிநூல் கிடந்தது ஒருபால்
(உறுவரை அருவியை) (வரையுறு அருவியை) மலையினின்று ஒழகும் அருவியை (நிகர்தரும்) ஒத்து விளங்குகின்ற (உரமிசை) மார்பின் மீது (உடன்கொள்) பொருந்தியிருந்த (புரிநூல்) முப்புரிநூல் - பூணூல் (கிடந்தது ஒருபால்) ஒருபுறம் கிடந்து விளங்க
40உரும் என இகலி முன் எதிர் பொரும் அவுணர் உள் உடைந்த உடைவாள் சிறந்தது ஒருபால்
(உரும் என) இடிபோல (இகலி) பகைத்து, முன்பு எதிர்வந்து (பொரும்) சண்டை செய்த அவுணர்களுடைய (உள்) உள்ளம் (உடைந்த) உடையும்படி செய்த (உடைவாள்) (சிறந்தது ஒருபால்) ஒருபுறம் சிறப்புற்றிருந்தது
41அநவரதமு(ம்) மறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால்
(அநவரதமும்) எப்போதும் (மறை முறையிடு) வேத ஒலியை வெளியிடுகின்ற (பரிபுரம்) சிலம்பு (அலங்கும்) அசைகின்ற இரண்டு திருவடிகளும் (குலுங்க ஒருபால்) ஒருபுறம் அசைந்து விளங்க
தேவியர்
42அளவு அறு கலவியின் முழுகிய குறமகள் அமர்ந்து உள் ஒயிலாய் நிமிர்ந்தது ஒருபால்
(அளவு அறு) அளவு கடந்த (கலவியில்) காம நுகர்ச்சியில் (முழுகிய குறமகள்) வள்ளியம்மை (அமர்ந்து உள்) உள் அமர்ந்து - உள்ளம் விரும்பி - உள்ளத்தில் விருப்பத்துடன் (ஒயிலாய்) ஒய்யாரமாய் - உல்லாச நிலையுடன் (நிமிர்ந்தது ஒருபால்) உயர்வுடன் விளங்கி நின்ற நிலை ஒருபுறம்
43வன தருவினில் உறை சதமகன் அருள் மகள் வதிந்து மணமே பொதிந்தது ஒருபால்
(வன தருவினில்) அழகிய கற்பக விருக்ஷ நிழலில் அல்லது கற்பக (வன) சோலை நிழலில் (உறை) அமர்ந்திருக்கும் (சதமகன்) இந்திரன் (அருள்மகள்) வளர்த்த மகள் தேவசேனை (வதிந்து) பக்கத்திலிருக்க
(மணமே) மகிழ்ச்சியே - நறுமணமே (பொதிந்தது ஒருபால்) ஒருபுறம் நிறைந்திருக்க -
அடியார்கள்
44வரும் அடியவரிடம் வலிய சநதம் வர வளர்ந்த சபையே கிளர்ந்தது ஒருபால்
(வரும் அடியவரிடம்) வந்து கூத்தாடும் அடியார் உள்ளத்திலே (வலிய) பலமான (சந்நதம் வர) தெய்வ ஆவேச உணர்ச்சி (பக்திக் குதூகலம்) வரும்படி (வளர்ந்த) விருத்தியடைந்துள்ள (சபைகள்) (ப¤னை) சபைகள் (கிளர்ந்தது ஒருபால்) ஒருபுறம் பிரகாசித்து ஓங்கின
45நினைவொடு பணிபவர் வினை துகள் படஎதிர் நினைந்து திரு நீறணிந்தது ஒருபால்
(நினைவொடு) மறதியின்றி - கருத்துடன் (பணிபவர்) வணங்குவோருடைய வினைகள் (துகள்படு) பொடிபடும்படி (எதிர் நினைந்து) அவர் கருத்தை முன்னதாக மனத்திற் கொண்டு திருநீற்றுப் ப்ரசாதத்தை (அணிந்தது ஒருபால்) தந்து ஒருபுறம் அணிவிக்க
46நிறை மலரொடு நல கலவையும் உயர்குரு நினைந்து தரவே புனைந்தது ஒருபால்
(நிறை மலரொடு) நிரம்ப மலர்களுடன் (நல்ல) கலவையும் நறுமணமுள்ள சந்தனக் குழம்பையும் (உயர்குரு) மேன்மையாளரான குருவை (நினைந்து தரவே) முருகவேளின் திருவடிகளைத் தியானித்துத் தர, (குரு - பிரகஸ்பதி தர) அவற்றைப் (புனைந்தது ஒருபால்) அணிந்து நிற்பது (அணிந்து நிற்பவர்) ஒருபுறத்தே விளங்க
47தினகரன் உலவு சநிதியினில் இரவலர் தெளிந்த தமிழே பொழிந்தது ஒருபால்
(தினகரன்) சூரியன் ஒளி (உலவு) பிரகாசிக்கின்ற (சநிதியினில்) சந்நிதியினில் முருகவேளின் முன்னிலையிலே (இரவலர்) முருகன்பால் குறை வேண்டி நிற்பவர்கள் (தெளிந்த தமிழே) தெளிவான செந்தமிழ்ப் பாடல்களைப் (பொழிந்தது ஒருபால்) பாடிப்பொழிதல் ஒருபுறத்தே விளங்க
48. சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
திருந்த முருகோன் இருந்த கொலுவே.
(சிவபரகிரியினில்) சிவஸ்தலமாகிய திருப்பரங்குன்றத்திலே (ஒரு சிவன் வடிவொடு) ஒப்பற்ற சிவபிரானது திருக்கோலத்துடனே (திருந்த) செவ்விய நிலையிலே - அழகு பெற, (முருகோன்) முருகவேள் (இருந்த) வீற்றிருந்த (கொலுவே) கொலுவானது இங்ஙனம் விளங்கிப்பொலிந்தது.
